என் உயிரைத் தியாகம் செய்தேனும் கிழக்கில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டேன் -முதலமைச்சர்




நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான பகடைக்காய்களாக முஸ்லிங்களை பயன்படுத்துவதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இனவாதமற்றவர்கள் என நாம் நம்பும் அதேவேளை இனவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரிக்கை விடுத்து எமது நம்பிக்கையை பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

ஏறாவூரில் செமட்ட செவன திட்டத்தின் கீழ் நூறு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,

நேற்று முன்தினம் இரவு எனது அலுவலகத்துக்கு அருகேயுள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்,பள்ளிவாசல்கள் என்பது எங்கள் ஆத்மாக்களோடு பின்னிப் பிணைந்த விடயம் அவற்றுக்கு அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் எம் உயிர்களை விட்டாவது அவற்றைக் காப்பற்ற நாம் தயாராகவுள்ளோம்.

அன்றைய யுத்த காலத்தில் நாம் எவ்வாறு நாம் பீதியுடன் இருந்தோமோ அதே போன்று இன்று முஸ்லிங்கள் தராவிஹ் தொழுவதற்கும் சுபஹ் தொழுவதற்கும் அச்சத்துடன் போக வேண்டிய நிலை உள்ளது.

இந்த அரசாங்கமும் இனவாதிகளும் ஒன்றை தௌிவாக புரிந்து கொள்ள வேண்டும்.நாம் இந்த நாட்டில் முஸ்லிங்கள் அடிமையாக வாழ விரும்பும் சமூகமல்ல,எல்லோருக்கும் இருக்கும் சமமான உரிமைகளும் சுதந்திரங்களும் முஸ்லிங்களுக்கும் இருக்கின்றன.அவற்றுக்கு அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் அதற்கு எதிராக குரல் எழுப்ப நாம் தயங்கப் போவதில்லை.

இவர்களின் நோக்கம் வடக்கு கிழக்கில் இனவன்முறைகளை தூண்டு விட்டு பின்னர் அதனைக் காரணம் காட்டி வடக்கு கிழக்கிற்கு வௌியே உள்ள முஸ்லிங்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதே என்பதை நாம் அறியாமலில்லை.

இன்று நாடுபூராகவும் பகிரங்கமாக நாக்கூசும் விதமாக இனவாதத்தை கக்கி வரும் ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதும் அவர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கின்றார்.

அவ்வாறானால் இவருக்கு ஆதரவளிக்கும் அந்த முக்கிய புள்ளி யார்?பௌத்தர்களின் வாக்குகளை மாத்திரம் நம்பியிருக்கும் ஒரு அரசியல்வாதியே இவ்வாறு செயற்பட முடியும் என்பதால் அந்த முக்கிய புள்ளியை கண்டறிந்து அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது,

அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ச்சியாக பாராமுகமாக இருக்குமாயின் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்,

இன்று சிலர் இதை வைத்துக் கொண்டு கடந்த கால ஆட்சியாளர்களை சுத்தப்படுத்தும் கைங்கரியத்தை முன்னெடுத்து வருகின்றனர்.கடந்த கால ஆட்சியில் தான் இன்று இத்தனை செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

அதனை முஸ்லிங்கள் மறந்து விடவில்லை என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,

ஆகவே முஸ்லிங்களின் நம்பிக்கையை மென்மேலும் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த அரசாங்கம் இனவாதிகள் மீது இனவாத ரீதியாக செயற்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்,

இனவாத ரீதியாக செயற்படுவோர் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோரை உடனே கைது செய்யும் படியும் கிழக்கின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் நாம் பணிப்புரை விடுத்துள்ளோம் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இங்கு தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -