கஹட்டோவிட்ட ரிஹ்மி -
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலுள்ள மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள், பெருந்தொகையான அரச ஊழியர்களும் உள்ளதுடன், அவர்களால் அந்த நிலைமையில் கடமைக்கு வர முடியாத சூழ்நிலையும் ஏற்ட்டுள்ளது. இதற்காக அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அணுகினோம். "நாட்டில் பெரியதொரு நிலப்பரப்பில் இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அறிந்தமட்டில் குறித்த பிரதேசங்களில் பாரிய தொகையிலான அரச ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு தற்போது எதுவும் மீதமில்லை. அது போன்று போக்குவரத்துச் சிக்கலும் நிலவுவதால் அவர்களுக்கு கடமைக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. இன்னும் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபரம் எமது அமைச்சிற்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் இலட்சக்கணக்கானோர் இருப்பதாக நம்புகிறோம். அதிகமானவர்கள் வராமலிருப்பதும் விடுமுறைக்கான அனுமதி பெற்று அல்ல.
குறைந்தபட்சம் தொலைபேசி மூலமாவது தகவல் தரக்கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை. இதன் காரணமாக நான் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறித்தியுள்ளேன், பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கு அதிகூடிய நடவடிக்கை எடுக்கும் படி. விசேடமாக, விடுமுறை வழங்குவதில் அதிக கரிசனை செலுத்தவுள்ளோம். அதற்கான சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளோம். அதே போன்று வீடுகளை இழந்த ஊழியர்களின் வீடுகளை மீண்டும் புனரமைப்பதற்கான உதவிகளை வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்" என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.