கொலொன்னாவை மீதொட்டமுல்ல குப்பை சரிந்து விழுந்தமையால் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் உலமா கட்சி தனது கவலைகளை தெரிவிப்பதுடன் இதற்கான முழு பொறுப்பையும் கொழும்பு மக்களை கைவிட்ட ஐ.தே.க அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மீதொட்டமுல்ல குப்பைத்தொட்டியை அகற்றும்படி அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக அரசை வேண்டியதுடன் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இப்பிரதேச மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியான மரிக்கார் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தும் இதற்கான அரச செயற்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் போன்று ஊடகங்களில் மட்டுமே பேசினார்.
கொழும்பு மக்கள் குறிப்பாக பின்தங்கிய பகுதி மக்கள் காலாகாலமாக ஐ தே வுக்கே வாக்களித்து வருபவர்கள். மஹிந்தவுக்கு கொழும்பு மக்கள் பரவலாக வாக்களிக்காத வரலாறாக இருந்தும் கடந்த மஹிந்த அரசு கொழும்பை நவீனமயப்படுத்தி, சுத்தப்படுத்தி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தது. அவை முற்றுப்பெறுமுன் மஹிந்த அரசு கவிழ்ந்தது.
கொழும்பு மக்களின் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளை பெற்ற ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருக்கும் நிலையில் மீதொட்டமுல்ல மக்கள் புதையுண்டமை கவலைக்குரியதாகும். இதன் மூலம் பிரதமர் கொழும்பின் பின் தங்கிய மக்கள் விடயத்தில் இந்த மூன்று வருடங்களிலும் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே தெரிகிறது.
கடந்த வெல்லம்பிட்டி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இந்த அரசு நடுத்தெருவில் விட்டது போன்று மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்ட மக்களையும் கைவிடாமல் இத்தகைய அனர்த்தங்களுக்கு அரசின் கவனக்குறைவை பொறுப்பேற்று உடனடியாக இப்பிரச்சினைக்கு அரசு நல்ல தீர்வை காண வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.