அம்பாரை மக்களினுடைய பிரச்சனை தொடர்பில் மட்டக்களப்பு விடுதி ஒன்றில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் சுனாமி வீடுகள் தொடர்பில் பேசுகின்ற போது 303 வீடுகள் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் ஏனையவை மாற்று சமுகத்தவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவருக்கு சுனாமி வீடுகள் தொடர்பான அடிப்படையின் மீதான போதிய விளக்கமின்மை அவர் அந்த வீடுகளை வெறும் வாழ்வாதாரமாக பார்ப்பதும் அவர் கூறுகின்ற விடயங்களால் அம்பாரை மாவட்ட இனப்பரம்பலுக்கு ஏற்பட போகும் சிக்கல் நிலை குறித்த தெளிவின்மை என்பன நாம் பேச வேண்டிய விடயங்கள் ஆகும்.
அவர் புரிதலுக்குட்படுத்த வேண்டிய விடயங்கள் சுனாமி வீடுகள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு காணி சட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதாகும். அன்று இருந்த அரச முகவர் ஏனையவர்கள் மாவட்ட விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறிய போதும் மூன்று இனங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கம் இங்கு குறிப்பிடப்படுகின்ற அளவை விட அதிகமான வீடுகளை முஸ்லீம்களுக்கு தர ஏற்றுக் கொண்ட போதும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அந்த வீடுகள் அக்கரைப்பற்று பிரதேச செயலக சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு கட்டப்பட்டது என்பதால் அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசர முறைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரினர்.
அம்பாரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து குடியேறிய பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு விகிதமான நிலங்களை கபளீகரம் செய்து கையகப் படுத்தி இருக்கிறார்கள் என உணர வேண்டும்.
முதலாவதாக இந்த தலைவர்கள் உணர வேண்டிய விடயம் அந்த நில அமைப்பு மாற்று இன பேரினவாத சக்திகளின் ஊடுருவல் தொடர்பான விடயம் ஆகும். இடத்தை தெரிவு செய்த போது ஏற்பட்ட குழப்பகரமான முடிவு அம்பாரை மாவட்ட அமைவது தொடர்பில் புரிதல் இல்லாத அமைச்சர் ஒருவரால் ஏற்பட்ட முதல் தவறு இன்று அதே புரிதல் இல்லாதவர்களால் இன்னுமொரு தவறு இடம் பெற வழி ஏற்படப் போவதாகவே உணர்கிறோம்.
நல்லாட்சியை உருவாக்கி இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி நனைகின்ற மக்களுக்கு இவர்கள் மகிந்தவின் அரசாங்கம் வழங்கிய தீர்வை நட்சத்திர விடுதிகளில் கூட்டி ஏதோ நாங்கள் சாதித்தோம் நாம் தலைவர்கள் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தலைவர்கள் என தம்மை சித்திரிக்கின்றவர்களை இன்று இரு வகைப் படுத்தலாம்.
1. பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காமல் இழுத்தடிப்பு செய்பவர்கள்
2. புதிய பிரச்சனை களை உருவாக்க முனைபவர்கள்
முஸ்லீம் அரசியலில் இதுவரை அகதிவாழ்வையும் வில்பத்துவையும் மாறாத வடுக்களாக வைத்து அரசியல் செய்பவர்கள் தங்களின் சுயநல அரசியல் இருப்புக்காக முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை சிதறடிக்க வேண்டாம்.
