மத்திய முகாம், சாளம்பைக்கேணி அஸ். ஸிராஜ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம். யூசுப் தலைமையில் இன்று (28) செவ்வாய்க்கிழமை மாலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெப்பை, சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - திட்டமிடல் எம்.எச்.ஏ. ஜாபீர், சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - அபிவிருத்தி எம்.எச்.எம். பாறுக், நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சரவணமுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஐ.எல். ஹமீட் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிவப்பு நிற சபா, பச்சை நிற மர்வா, நீல நிற மினா ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வில்ல விளையாட்டுப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை சபா இல்லமும் இரண்டாமிடத்தை மர்வா இல்லமும் மூன்றாமிடத்தை மினா இல்லமும் பெற்றுக் கொண்டன.
இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் குறைகளை கண்ணுற்ற விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இம்மைதானத்தை அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்ததோடு பாடசாலை சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று இப்பாடசாலைக்கு பேன்ட் வாத்தியக் கருவிகளையும் வழங்குவதாக இதன்போது உறுதியளித்தார்.











