ஞானசார தேரர்: மர்மமும் மாயமும்!

எஸ்.ஹமீத்-
ரலாறு முழுவதும் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மைப் பேரினவாத சக்திகளினால் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அவ்வப்போதான தாக்குதல்களுக்கும் ஆளாகியே வந்திருக்கின்றனர். மக்கள் எண்ணிக்கையில் தாங்கள் அதிகமானோர் என்ற கர்வமும் தலைக்கனமும் சிங்கள, பௌத்த ஆதிக்க சக்திகள் சிறுபான்மை முஸ்லிம்களின் மீது வன்மம் கொள்வதற்கான பிரதான காரணமென்பது ஒரு புறமிருக்க, இலங்கை முஸ்லிம்கள் கல்வி, வியாபாரம் மற்றும் இன்னோரன்ன துறைகளில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதனால் ஏற்படுகின்ற பொறாமையும் காழ்ப்புணர்வும் கூட முஸ்லிம் சமூகம் அமைதியற்ற கவலை நிலைகளுக்குள் இனவாதச் சிங்கள சக்திகளினால் தள்ளி விடப்படுவதற்குக் காரணங்களாக இருந்து விடுவதைப் புறம் தள்ள முடியாது.

இந்த வகையில் சிங்கள பல சேனா, இராவண பலய, ஜாதிக ஹெல உறுமய, சிங்கள ராவய, ஹெலயுகய ஜாதிக சங்விதானய, சிங்க லே போன்ற துவேஷ வெறியும் துர்க் கொள்கைகளும் கொண்ட பல அமைப்புகள் இலங்கையில் தோற்றம் பெற்றிருக்கின்றன. இவையனைத்தையும் மற்றும் இங்கு குறிப்பிடப்படாத பல சிங்கள இனவாத அமைப்புகளையும் விட அதிக நச்சுத்தன்மை கொண்ட அமைப்பாக பொதுபல சேனா அமைப்பை நாம் அடையாளப்படுத்தலாம்.

பொது பல சேனா அமைப்பானது கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது உதயமானது. இந்த நாட்டில் ஓரளவு அமைதியாக வாழ்ந்த முஸ்லீம் மக்களின் மீது அந்த அமைப்பு எடுத்த எடுப்பில் போர்ப் பிரகடனம் செய்தது. ஹலால் உணவுக்கெதிராகவும், முஸ்லீம் பெண்களின் பர்தாவுக்கெதிராகவும் மிகக் கோரமாகக் குரலெழுப்பியது. பத்திரிகை மகா நாடுகளை நடாத்தி முஸ்லிம்களின் மீது அப்பட்டமான வன்மங்களை உமிழ்ந்தது. பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது. பன்றியின் இறைச்சியையும் இரத்தத்தையும் மஸ்ஜிதுகளுக்குள் கூசாமல் கொண்டு வந்து போட்டது. அத்தோடு, 'இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இடமில்லை; அவர்கள் சவூதிக்கோ பாகிஸ்தானுக்கோ போகட்டும்.' என்று காட்டுக் கத்தலாய்க் கூப்பாடு போட்டது.

இந்த அமைப்பின் வெளிப்படையான இயங்குதாரியாக இருந்தவர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவர். பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் இவர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இவரும் இவரது அமைப்பும் முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விட்ட இனவாத பயங்கரத்தை எந்தவொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் மறந்து விட மாட்டார். அந்த மறக்க முடியாத காயங்களின் விளைவாகத்தான் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு, ஓரணியிற் திரண்டு கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இந்த ஞானசார தேரரினதும் அவரது அமைப்பான பொது பல சேனாவினதும் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் தற்போது குறைந்து காணப்படுகிறது. ஹலால் உணவு மற்றும் பர்தா அணிவதற்கெதிரான இந்த இயக்கத்தின் ஆக்ரோஷக் கூப்பாடு வெகுவாகவே அடங்கி விட்டது. ஓரிரு சம்பவங்களைத் தவிர பள்ளிவாசல்களுக்கெதிரான தாக்குதல்கள் நடைபெறவில்லை.

கடந்த அரசாங்கம் இந்த ஞானசார தேரரையும் அவரது அமைப்பையும் போஷித்துப் பாதுகாத்து வளர்த்து வந்ததனை ஐயமில்லாமல் நம்பிய முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைத் தற்போதைய அவர்களது மந்தமான செயற்பாடு மேலும் உறுதிப்படுத்துவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த அரசாங்கத்தில் அவர்களுக்கான 'ஊட்டச்சத்து' எதுவுமின்றிய நிலையில் தங்கள் நடவடிக்கைகளை அவர்கள் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கும் நாம் இலகுவாக வந்து விடலாம். ஆக, மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பொது பல சேனாவை இந்த அரசாங்கம் அநாதை நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது என்று கூறலாம்.

இங்கேதான் ஒரு கேள்வி எழுகிறது. 'பொது பல சேனாவைக் கடந்த அரசாங்கம்தான் உருவாக்கிப் பாதுகாத்தது என்று முஸ்லிம் மக்களை உறுதியாக நம்பச் செய்வதற்கான ஒரு திட்டம் வேறொரு சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகிறதா...?' என்பதே அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், ஊகத்தின் அடிப்படையில் 'ஆம்; இந்த அரசாங்கம்தான் அந்தச் சக்தி. மகிந்த அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் கொண்ட வெறுப்பு நீங்கிவிடக் கூடாது என்பதற்காக, இந்த அரசாங்கமே தற்போது பொது பல சேனாவை அடங்கியிருக்கும்படிப் பணித்திருக்கிறது!' என்று கூறலாம்.

நீர் போலத் தோற்றம் தரும் கானலை நீரென நம்பி ஏமாறுகின்ற மான்களாக முஸ்லிம் சமூகம் ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடையோர் இவ்வாறுதான் தற்போதைய பொது பல சேனா இயக்கத்தினதும் ஞான சார தேரரினதும் இயங்குதலை, நகர்வுகளை மற்றும் திட்டங்களை எடைபோட்டுப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 'இனி எப்போதும் எமக்கு ஆபத்தில்லை.' என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

முன்னரைவிடத் தற்போது ஞானசார தேரர் ஓர் அதிதியைப் போல வெகு கண்ணியத்தோடும் மரியாதையோடும் இந்த அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நாம் வெகு தெளிவாக முன் வைக்க முடியும். இந்த நாட்டின் ஜனாதிபதியை அவர் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார். அமைச்சர்களோடு நினைத்த நேரத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார். விரும்பிய திணைக்களங்களுக்கு விரும்பிய நேரத்தில் சென்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் மட்டுமன்றிக் கட்டளைகளும் பிறப்பிக்கிறார். பஜிரோவில் பந்தாவாக வலம் வருகிறார்.

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் இந்த அரசாங்கம் சால்ஜாப்புக் காட்டுகிறது. பள்ளிவாசலை இடித்து, அகற்றியே ஆக வேண்டுமென்ற முனைப்புகள் மேலோங்கியிருக்கின்றன. அதற்குப் பகரமாக மிகக் குறைந்த பரப்பளவில் காணியொன்றைத் தருவதாக ஒப்புக்குச் சொல்லப்படுகிறது.

அளுத்கம -தர்கா நகர் கலவரம் பற்றிய விசாரணைகள் மூடுமந்திரமாகவே உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை. அந்தக் கலவரத்தைத் திட்டமிட்டு இயக்கியோர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கலவரத்தின் மிக முக்கியமான சூத்திரதாரி ஞானசார தேரர் என்பது மிகத் தெளிவான உண்மையென்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதுபற்றி அவர் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இன்னொரு புறம் வில்பத்து விவகாரத்தில் வட மாகாண முஸ்லிம் அகதிகளை நசுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் ஞானசார தேரர் கையிலெடுத்திருந்த விடயத்தை இன்று அரசாங்கமே உத்தியோகபூர்வமாகக் கையாளுகிறது.

தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அரைவாசிக்கும் மேலாகக் குறைக்கும் நடவடிக்கைகள் திரை மறைவிலும் பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவும் ஞானசார தேரருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் விடயமென்பது சொல்லாமலேயே தெரியும். 

இவற்றையும் இது போன்ற இன்னுமின்னுமான பல விடயங்களையும் பார்க்கையில் ''நீ சும்மாயிரு; முஸ்லிம்களுக்கு நாங்களே வேலையைக் காட்டுகிறோம்!'' என்று சில அதிகார சக்திகள் ஞானசார தேரருக்குச் சொல்லியிருக்கலாமோ என்ற நியாயமான சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எதற்கும் முஸ்லிம் சமூகம் மிகுந்த எச்சரிக்கையாகவே இருப்பது காலத்தின் தேவையாகும்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -