எம்.ரீ. ஹைதர் அலி-
காத்தான்குடி ஊர் வீதியினுடைய புனரமைப்பு பணிகள் தனது முயற்சியினால்த்தான் நிதி ஒதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதாக எந்தவொரு நிகழ்விலும் நான் தெரிவிக்கவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
பொதுமக்கள் அன்றாடம் செய்கின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர் ஆகியோரை நேரடியாகவும் தொலைபேசியினூடாகவும் தொடர்பு கொண்டு இவ்வீதியினுடைய அபிவிருத்தி பணிகள் ஸ்தம்பித்து காணப்படுவதனால் இவ்வீதியில் வசிக்கும் மக்களும், இவ்வீதியால் பயணிப்பவர்களும் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இவ்வீதியினால் நான் அன்றாடம் பிரயாணங்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் என்னிடம் தெரிப்பதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி இருந்தேன்.
இவ்வீதியினுடைய அபிவிருத்தி பணிக்காக எவருடைய நிதி ஒதிக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இவ்வாறான அசமந்தப்போக்கினால் பொதுமக்கள் எவ்வகையிலும் சிரமங்களை எதிர்கொள்ள முடியாது என்றும் இவ்வீதி அபிவிருத்தி பணியில் ஸ்தம்பிதம் காணப்படுமாக இருந்தால் கொந்தராத்து நபருக்குரிய அனுமதியினை ரத்து செய்து வீதியினை தங்களின் நேரடி கண்கானிப்பின்கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னின்று இவ்வீதி அபிவிருத்தியினை துரித கதியில் நிறைவுசெய்து இவ்வீதியில் வசிக்கும் மற்றும் பயணிக்கும் மக்களின் சிரமங்களை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருந்தேன்.
எமது நாட்டில் எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் தனது நிதி ஒதிக்கீட்டினால் பெதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி பணியாக இருந்தாலும் அதனை துரித கதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் முறையில் அபிவிருத்திகள் அமைய வேண்டுமே தவிர வெறுமெனே அபிவிருத்தி என்ற போர்வையில் வருட காலங்களாக பொதுமக்கள் சிரமப்படும் வகையில் அபிவிருத்திகள் அமையக்கூடாது. இது எந்தவொரு மக்கள் பிரதிநிதிக்கும் பொருத்தப்பாடாக அமையும் என்பதனை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்றொரு பல வருட காலமாக ஸ்தம்பிதம் அடைந்த அபிவிருத்தியாகவே இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் காணப்பட்டன.
சில தினங்களுக்கு முன்னர் இவ்வீதியினுடைய அபிவிருத்தி பணிகளை நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொள்ளவுள்ளதாக நான் மாவட்ட பிரதம பொறியியலாளரை தொடர்புகொண்டபோது எனக்கு கூறப்பட்டது. அந்த வகையில் குறிப்பிட்ட தினம் அவ்விடத்திற்குச் சென்று தடைப்பட்டிருந்த வேலைகள் நடைபெறுவதனை அவதானித்தேன்.
மேலும், நான் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், இப்பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், இவ்வீதியினால் நான் அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்ளுபவன் என்ற அடிப்படையிலும் என்னிடம் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகள் அடிப்படையிலுமே இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தடைப்பட்ட இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்குரிய என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு அபிவிருத்தியினை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன்.
மற்றையபடி இவ்அபிவிருத்தி பணிக்குரிய நிதி ஒதுக்கீடு என்னால்தான் பெறப்பட்டது என்றோ அல்லது இந்த அபிவிருத்தி பணிக்கு நான்தான் காரணம் என்றோ எங்குமே சொல்லவில்லை உரிமை கொண்டாடவும் இல்லை என்பதனை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
இது சம்மந்தமான என்னுடைய செய்தியினை சரியான முறையில் வாசித்து அதனை கிரகித்து அதனுடைய அர்த்தத்தினை புரிந்துகொள்ளாமல் அச்செய்தியினை தவறாக விளங்கிக்கொண்டு அவசரப்பட்டு அறிக்கைகள் இட்டு மக்கள் மத்தியில் பிழையான எண்ணங்களை தோற்றுவிக்கக்கூடிய பிழையான அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
செய்திக்கு:..
