மினுவாங்கொடை நிருபர்-
நாட்டின் பல பிரதேசங்களில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மினுவாங்கொடை - கல்லொழுவை முஸ்லிம் கிராமத்திலும் வரட்சி நிலை ஏற்பட்டு, ஆறுகள், வாய்க் கால்கள், கிணறுகள் என்பன வற்றியுள்ளதோடு, மக்கள் குடிப்பதற்குக் கூட நீர் இன்றி தவித்து வருகின்றனர். கால் நடைகள் உட்பட செடி கொடிகள், புற் பூண்டுகள் ஆகியனவும் செத்து மடியும் நிலையில் உள்ளன. மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் நலன் விரும்பிகள் பலரும் பவுசர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லொழுவை ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையினர், கல்லொழுவை கிளை ஜம்-இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ஆகியோரது ஏற்பாட்டில், (28) செவ்வாய்க் கிழமை காலை வரட்சி நீங்கி மழை பொழிய வேண்டும் என வேண்டி, தொழுகை மற்றும் விசேட து ஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கல்லொழுவை அழுத் மாவத்தை முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஜும் ஆப் பிரசங்கத்தை மெளலவி நூருல் ஹஸன் (பின்னூரி) அவர்களும், து ஆப் பிரார்த்தனையை மெளலவி பாஹிர் தீன் (தீனிய்யா) அவர்களும் நடத்தி வைத்தனர்.
