நாட்டின் தேசிய கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்குமாயின் அதற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானங்களை எடுக்க தாமதிக்கக் கூடாது என நாம் இந்த மகா சபையில் வைத்து ஜனாதிபதிக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவ்வாறு தாமதிப்பதனால் நாடு பாதாலத்துக்கு இட்டுச் செல்லப்படுகின்றது என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மகா சபையின் கன்னிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேரர் ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நாடு புத்தி ஜீவிகளின் அறிவுரைக்கு ஏற்ப வழிநடாத்தப்பட வேண்டும். சொகுசு அரைகளுக்குள் இருந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய பிரகாரம் தீர்மானம் எடுப்பவர்களுக்கு எதிராக இந்த மகா சபை தீர்மானத்தை நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது ஜனாதிபதிக்கு இந்த இடத்தில் நாம் ஒன்றைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷயோ, ரணில் விக்கிரமசிங்கயோ வெற்றி பெறவில்லை. நீங்களே வெற்றி பெற்றீர்கள். அந்த இருவருக்கும் அரசாங்கத்தை அமைக்க இந்த நாட்டில் அதிகாரம் கிடைக்கவில்லை.
இதனால், ஜனாதிபதியவர்களே, ஒருவர் இருவருக்கு தேவையான விதத்தில் அல்ல நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். உங்களுக்கு தீர்மானம் எடுக்க அதிகாரம் உள்ளது. நீங்கள் ஏன் தாமதிக்கின்றீர்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு பொழுதும் இந்த நாடு இருளுக்குள் பயணிக்கின்றது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறினார்.
