ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலும் சில பிரதேசங்களிலும் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் பெரு வெற்றி வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.
கடந்த சனிக்கிழமை மாலை பாத்ததும்பறை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மீகம்மனயில் குடிநீர் வழங்கும் திட்டமொன்றினை ஆரம்பித்து வைத்து அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பெரும்பான்மைக் கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும். அது ஐக்கிய தேசியக் கட்சியுடனா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனா என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
எந்தக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பிலும் ஆராயப்படும்.தற்போது நல்லாட்சி நிறுவியிருக்கும் பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் சேர்ந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதலான வெற்றிவாய்ப்பினைப் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை பிரச்சினைகளின்றி எதிர்கொள்வதற்காகவே கட்சியின் உட்பூசல்கள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விவெ.
