அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை திருகோணமலைக்கு இடமாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அரசியல் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அவசரக் கடிதம் ஒன்றை அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோருக்கு தென்கிழக்கு கல்விப் பேரவை அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் அயராத முயற்சியினால் அமைக்கப்பட்ட இந்த அலுவலகம் 2011 ஆண்டு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் முன்னாள் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வலுவலகத்தினூடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இளைஞர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கடந்த காலங்களை விட தற்போது சிறப்பான சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருடம் இவ்வலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தலையிட்டு, துரித நடவடிக்கை எடுத்ததன் பயனாக அம்முயற்சி தோல்வியடைந்தது.
எனினும் 2017ஆம் ஆண்டுக்கான தேசிய யொவுன்புர நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதனைக் காரணமாக முன்வைத்து இந்த அலுவலகத்தை திருகோணமலை நகருக்கு கொண்டு செல்வதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை நிர்வாகத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.
ஆகையினால் இம்முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
