வட கிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தடுமாறுகிறதா..?

ழந்த சக்தியை மீட்க தேனீர் என்பது போல் முஸ்லிம் அரசியலில் காலத்திற்கு காலம் அவ்வப்போது அரசியல்வாதிகளை மாத்திரமல்லாமல் மக்களையும் ஏதோவொரு வகையில் இயங்கு நிலையில் வைத்திருப்பது உணர்ச்சி அரசியலே. இப்படியான உணர்ச்சி மைய அரசியலை செய்பவர்கள்தான் முஸ்லிம் அரசியலின் ஹீரோக்களாக பார்க்கப்படும் அவல நிலையும் உண்டு.

அதிலொன்றுதான் வட கிழக்கு இணைப்பு என்ற விவாதமாகும். முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற விடையை மாத்திரம் சொல்லவும் என்ற கேள்விக்கணைகள் பரவலாக முன்வைக்கப்படும் நிலையில்.
  • வட கிழக்கு இணைப்பை நிறைவேற்ற பாராளுமன்றில் அறுதிப் பெரும்பான்மை வேண்டும். 
  • மஹிந்த தரப்பினர் ஒரு போதும் இதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
  • பௌத்த சிங்கள பேரினவாதிகள் வன்மையாக எதிர்ப்பர்வ.
  • வட கிழக்கு இணைப்புக்கு நல்லாட்சி ஆதரவு வழங்குமாயின் நல்லாட்சியின் இருப்புக்கு அது பாதிப்பாக அமையும்.
இது போன்ற தர்க்க ரீதியான காரணக்களினால் வட கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எது எப்படிப் போனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பு வாய்ந்த கட்சி என்றடிப்படையில் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு எதிராக, முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் அமையும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவு வழங்கக்கூடாது. அவ்வாறான தீர்மானங்கள் கட்சியின் இருப்பைக் கூட பாதிக்கும் என்பது சிறு பிள்ளை கூட அறியும்.

இவ்வாக்கத்தில் சொல்ல வரும் விடயம் யாதெனில், வட கிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஆமா இல்லையா என்ற எம்.சி.கியு கேள்விக்கு பதிலளிப்பதன் பின்னாலுள்ள அரசியல் நாடகம்தான் சுவாரஸ்யமானது.

அந்த நாடகத்தில் விடை ஆம் என்றாலும் இல்லையென்றாலும் முடிவு முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகவே அமையும். அதற்கேற்ற வகையில் சதி வலையும் திட்டமிட்டு தீட்டப்பட்டிருந்தது. மேலதிக புரிதலுக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வேறொரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண முதலைமைச்சர் ஆக வருவதாக செய்திகள் கசிந்தன. அதேநேரம் ஆமா இல்லையா என்ற கேள்விக்கு முஸ்லிம் காங்கிரஸ் பதில் தர வேண்டுமென்று பல்வேறு கட்சித் தரப்பினரும் மேடை போட்டு முஸ்லிம் காங்கிரஸ் மீது அழுத்தம் கொடுத்தே வந்தனர். மக்களும் ஆமா இல்லையா என்ற பதிலை முஸ்லிம் காங்கிரஸ் சொல்வதற்கு ஏன் இந்த தயக்கம் என்றும் பேசிக் கொண்டனர்.

உண்மையில் இந்த பிரச்சினையைப் மையமாகக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கிலே சில விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. 

வட கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை, அவ்வாறானதொரு இணைப்பை எதிர்க்கின்றது என முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக கூறுமாயின், அது முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோருக்கு தீனி போட்டதாகவே அமைந்து விடும். எவ்வாறெனில்,

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச தீர்வாக வட கிழக்கு இணைப்பை வழங்க முன்வந்தாலும், அவ்வாறு வழங்குவது அவர்களது அரசியல் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும். இந்த திரிசங்க சொர்க்க நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அதனை வெளிப்டையாக எதிர்க்குமாயின், நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் மீது பழியைப்போட்டு தப்பித்துக் கொள்ளும்.

தமிழ் தேசிய கூட்டைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையை ஆளுகின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான வெளிச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆட்சியில் இருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸ் ஆளுகையின் கீழ் உள்ள ஆட்சியை கவிழ்த்தல். இதன் போது முஸ்லிம் காங்கிரஸை கிழக்கில் பலவீனப்படுத்தும் வகையில் வேறொருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவர். இதுவே ஆமா இல்லையா என்ற நாடகத்தின் முக்கிய பகுதியாகும்.

தமிழ் பேசும் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தல். மூன்று தசாப்த கால தமிழ் மக்களின் இழப்புக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட வட கிழக்கு இணைப்பு யோசனையை முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்து, தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டது என்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் காங்கிரஸ் மீதும் முஸ்லிம்கள் மீதும் முன்வைத்தல்.

அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றது என்று கூறுமாயின் அதனை வைத்து முஸ்லிம் காங்கிரஸின் எதிராளிகள் ஒன்று சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து விட்டது என்று முஸ்லிம்களிடத்தில் பிரசாரம் செய்வர். முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்பை ஆதரிக்காத நிலையிலே முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஆதரித்து விட்டது என்று போலிப் பிரச்சாரங்கள் செய்யப்படுவதன் மூலமே இது உறுதிப்படுத்தப்படுகின்றது. 

வட கிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் முஸ்லிம் காங்கிரஸ் மீதான போலிப் பிரச்சாரங்களை இன்றைய அரசியல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் இதுபோன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விதத்தில் செயற்பாடுகளை மேற்கொள்ளவிடின் இது போன்ற போலிப் பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் இயங்கா நிலையிலே உள்ளனர்.

எப்படிப் போனாலும் வட கிழக்கு இணைப்பு ஆமா இல்லையா என்ற ஒன்றை வார்த்தையில் விடை காணுவதை விடவும் முஸ்லிம் சமூகம் எந்தவிதத்திலும் இழப்புக்களை சந்திகாத வண்ணமும் தமிழ் சமூகத்தின் அரசியல் தீர்வுக்கு எதிராக அமையாதா முறையிலும் பொருத்தமான ஒரு பொறிமுறையை கையாண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முஸ்லிம்களின் விருப்பு இன்றி வட கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முஸ்லிம்களின் மனதை வெல்லுகின்ற, நம்பிக்கையை கட்டி எழுப்பும் செயற்பாட்டை தமிழ் தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாதுவிடின் தமிழ் முஸ்லிம் விரோத சக்திகளுக்கும் அதற்குத் துணை போகும் முகவர்களுக்கும் வட கிழக்கில் அரசியல் செய்யும் களம் விரிந்து கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.
எம்.ஐ.ஸாஹிர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -