களுத்துறை மாவட்ட மத்துகமையில் தமிழ் பாடசாலை என்ற தீர்மானம் எனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு-மனோ கணேசன்

ளுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் மிக நீண்டக்கால கோரிக்கையான மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இன்று நான் இந்த களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக்கொள்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று ஐந்து ஏக்கர் இடம் ஒதுக்கி தமிழ் பாடசாலை கட்ட இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சி அமைச்சர்களும், எம்பீக்களும், அதிகாரிகளும் ஏகமனதாக முடிவெடுத்தமை, நாளைவரும் எனது பிறந்த நாளுக்கு முன்கூட்டியே எனக்கு கிடைத்த பரிசாகும். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண்களை திறந்து விடுவதைவிட எனக்கு வேறு பெரிய பரிசு என்ன கிடைக்கபோகின்றது? என களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத்தலைவர்கள் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, அஜித் பெரேரா தலைமையில், மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, ஏனைய அமைச்சர்கள், எம்பீக்கள், மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜெயலத் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் வட களுத்துறை கார்டன் பீச் விடுதியில் நடைபெற்றது. மத்துகமை கன்னங்கர தேசிய பாடசாலைக்கு சமீபமாக மத்துகமை நகர எல்லையில் நாரவில பாலிகா வீதியோரமாக ஐந்து ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டு அளக்கப்பட்டு இன்று, அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கையின்படி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் பாடசாலை நிர்மாணிக்க மேல்மாகாண கல்வி அமைச்சர் இந்த கூட்டத்தின் போது இணங்கியுள்ளார். இந்த பெருந்தோட்ட காணியை மேல்மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமாக்குவது தொடர்பில் அமைச்சர்கள் மனோ கணேசன், மகிந்த சமரசிங்க ஆகிய இருவரும் கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் மேலும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விசேட அழைப்பின் பேரில் நேரடியாக கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி கூறுகையில்,

இன்று எடுக்கப்பட இந்த தீர்மானம் என்னை மகிழ்விக்கின்றது. அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, அஜித் பெரேரா ஆகியோர் எனது இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உதவியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றிகள். இது எனக்கு ஒருநாள் முன்கூட்டியே கிடைத்த பிறந்தநாள் பரிசு என எண்ணுகிறேன். எங்கள் பிள்ளைகளின் கல்வி தேவையை நிறைவேற்றுவது கடவுளுக்கு செய்யும் சேவையாகும். இதைவிட வேறு ஒரு சிறந்த பரிசு எனக்கு கிடைக்க போவதில்லை. இது தொடர்பில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனநாயக மக்கள் முன்னணி களுத்துறை மாவட்ட அமைப்பாளர் சிவராஜா, களுத்துறை மக்கள் இயக்க அங்கத்தவர்கள் ஆரோக்கியசாமி, இராஜரத்தினம் மற்றும் கட்சி அமைப்பு செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். இது எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பங்களிப்பினால் கிடைத்த வெற்றியாகும்.

இந்த வட களுத்துறையில் எடுக்கப்பட்ட இந்த இன நல்லுறவு தீர்மானம், வட இலங்கைக்கும் நல்லுறவு செய்தியாக செல்லும் என நான் நினைக்கின்றேன். அங்கிருந்து இன நல்லுறவு செய்தியை அது கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

இதுபோலவே கம்பஹா மாவட்ட தமிழ் மக்களின் நீண்டக்கால கோரிக்கையை நிறைவேற்ற இவ்வருடம் பெப்ரவரி14ம் திகதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் கம்பஹா மாவட்ட அமைச்சர்கள் ஆகியோரை அழைத்து தமிழ் பாடசாலைக்கு அடிக்கல் நாட்ட நானும், இதே மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவும் முடிவு செய்திருந்தோம். ஆனால், கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒருசில நபர்களின் தவறான வழிகாட்டலால், அமைச்சர் ஜோன் அமரதுங்க அந்த நிகழ்வை நிறுத்திவிட்டு தாமே தனியாக எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய ஒருசிலரையும் அழைத்துக்கொண்டு அடிக்கல் நாட்டப்போய் மக்களின் எதிர்ப்பினால் குழப்பம் ஏற்பட்டு இன்று வத்தளை தமிழ் பாடசாலை விவகாரம் நின்று போய் இருக்கிறது.

பிரதமரின் பங்கு பற்றலுடன் அந்த பாடசாலையை பெப்ரவரியில் கட்டத்தொடங்கி இந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்து, ஜனவரியில் முதலாம் வகுப்பு பிள்ளைகளை அனுமதி வழங்கி வத்தளை இந்து வித்தியாலயத்தை விமரிசையாக ஆரம்பிக்கவே நான் திட்டமிட்டிருந்தேன். அதற்காக ஐம்பது இலட்சம் ரூபா நிதியும் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டது. எனினும் ஒருசில குறுகிய மனம் படைத்த நபர்களினால் அந்த திட்டம் கைகூடாமல் போனதையிட்டு, நான் இன்று வத்தளை தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு எவர் மீதும் கோபமில்லை. தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் செயற்பட்ட அமைச்சர் ஜோன் அமரதுங்கவையும், அவரது சீடர்களையும் அமைச்சர் வணங்கும் கர்த்தர் மன்னிக்கட்டும். தாங்களும் செய்யாமல், செய்யக்கூடியவர்களையும் செய்யவிடாமல் குழப்பும், வத்தளையிலும். கொழும்பிலும் இருக்கின்ற ஒருசிலர் இனியாவது திருந்த வேண்டும். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் காலம் என்பதை தெளிவாக புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

இன்று தற்காலிக ஏற்பாடாக வத்தளையில் இருக்கின்ற சிங்கள பாடசாலைகளில் மூன்று முதலாம் வகுப்புகளை, தமிழ் மொழியிலும் ஆரம்பிக்க நான் விடுத்த வேண்டுகோளை மேல்மாகான முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த வருடம் வத்தளையிலும் காணி ஒதுக்கி புதிய தமிழ் பாடசாலையை நான் கட்டுவேன். அதுவரை சிங்கள பாடசாலைகளில் தமிழ் வகுப்புகள் தற்காலிகமாக நடைபெறும். இதையும் இடையில் புகுந்து குழப்ப கூடாது என என்னை அரசியலில் ஒழிப்பதாக நினைத்துக்கொண்டு ஏழை பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகளை ஒழிக்கும் நபர்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -