ஆதிப் அஹமட்-
செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உறுகாமம்(றூகம்) மீள்குடியேற்ற கிராமத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று(31.12.2016) உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
உறுகாம கிராம மக்களின் வேண்டுகோளின் பெயரில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் நேற்று உறுகாமம் கிராமத்திற்கு நேற்று களப்பயணம் மேற்கொண்டார்.மேற்படி கிராமத்தில் நிலவும் முக்கிய குறைபாடாக குடிநீர் பிரச்சினையே அடையாளப்படுத்தப்பட்டு அது தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டது.தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர்மட்ட அதிகாரிகளோடு உறுகாமத்தில் நடைபெற்ற கூட்டத்திலிருந்தவாறே தொடர்பு கொண்ட இணைப்புச்செயலாளர் முபீன், இக்கிராமத்திற்கு குடிநீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி விரைவில் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை அமைச்சருக்கு சமர்ப்பிக்க தருமாறு கேட்டுக்கொண்டார்.இதன்போது கருத்து தெரிவித்த இணைப்புச்செயலாளர் முபீன்,இக்கிராம மக்கள் எங்களிடத்தில் இக்குடிநீர் தேவையை கேட்பதற்கு முன்பே கிராமத்திற்கான குடிநீரை வழங்குவது தொடர்பில் இரண்டு உயர்மட்ட பொறியியலாளர் குழுவினர் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்து ஆய்வினை மேற்கொண்டதாகவும்,இப்பிரதேசத்தில் பூமிக்கடியில் காணப்படும் பாறைகள்(Rocks) காரணமாக குழாய்களை பொருத்த முடியாமலிருப்பதாக தெரிவித்ததுடன் உறுகாமம்,வடிச்சல் மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழ் பிரதேசங்களுக்கும் குடிநீரை வழங்க நானும்,மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் பலனாக தற்போது ரூபா அறுபது(60) இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.அத்துடன் எனது வேண்டுகோளின் பெயரில் இன்னும் ஓரிரு தினங்களில் இப்பிரதேசத்திற்கு விஷேட பொறியியலாளர் குழுவினை அனுப்பி நீர் வழங்கல் தொடர்பில் சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.அத்துடன் இக்கிராமத்தின் ஏனைய தேவைகள் தொடர்பில் கௌரவ அமைச்சர் தேசிய தலைவர் றவூப் ஹகீம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
றூகம் சுபைர் ஹாஜியார் வித்தியாலத்தின் அதிபர் ஹஸ்ஸாலி சாஹிப் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் உறுகாமம் கிராம முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹ்ரூப், உறுகாமம் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயலின் தலைவர் மீராசாஹிப்,மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆதம்லெப்பை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


