நல்லாட்சியிலும் இனவாத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகிறது - உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் ஓயவில்லையென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்; தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 66ஆவது அமர்வு நேற்று (29) தவிசாளர் சந்திரதாச கலப்பெதி தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரினால் நமது நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வினையும் ஏற்படுத்தும் முகமாக கொண்டுவரப்பட்ட ஆட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:-

நமது நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகாரத்தில் இருந்தவர்கள் நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். 

ஆட்சி மாற்றத்தின் பின்; இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் தங்களது மத உரிமைகளுடன் சந்தோசமாக வாழமுடியும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வாழும் இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்களின் மதத்துக்கும் எதிராக இனவாதக் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடாத்திக் கொண்டிருக்க மறுபுறம் ஆளுங்கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் சிலர் பகிரங்கமாகவே முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நமது நாட்டின் பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சர் 32 முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து செயற்படுவதாக பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அதே போன்று மாணிக்கமடு பௌத்த சிலை வைப்பு விவகாரத்தில் அம்பாரை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் 30000 வாக்குகளைப் பெற்ற அமைச்சர் தயா கமகே கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான கரையோரப் பிரதேச 12000 ஏக்கர் காணிகள் தீகவாபி விகாரைக்குட்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான இனவாத அமைச்சர்களின் கருத்துக்கள் இனவாத குழுக்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது முஸ்லிம் சமூகம் பல இழப்புக்களைச் சந்தித்தும் கூட பொறுமை காத்துவந்தது. குறிப்பாக இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை தலைவர்களோடும், பெரும்பான்மை சமூகத்தோடும் ஐக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஆத்தின் செயலாளர் அப்துல் றாசிக்; இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம் பெற்றுவரும் கசப்பான சம்பவங்களுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் பேருவல, அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை அரங்கேற்றி இனக்கலவரத்தை ஏற்படுத்தியவர் என்றவகையில் ஞானசார தேரருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டும்; அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும்; இந்த நல்லாட்சி அரசு மேற்கொள்ளவில்லை. 

நமது நாட்டில் சிரேஷ்ட பௌத்த தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏனைய சிறுபான்மை சமூகத்துடன் இன உறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக அர்ப்பனிப்போடு செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை அத்துடன் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் இருந்ததில்லை.

தற்போது நமது நாட்டில் சிங்கள், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இனமோதலை ஏற்படுத்த பல சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்க்க கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். இந்த நல்லாட்சி அரசில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி இந்த நாட்டில் மூவின சமூகங்களும் ஐக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான வழிகளை நல்லாட்சி அரசு ஏற்படுத்த வேண்டும்.

இந்த நாட்டிலே சமூகங்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும் மாறாக பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதனை இந்த அரசு நிறுத்த வேண்டும். சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டிய பௌத்த மதத்தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இன மோதல்களை தோற்றுவிக்க முனைகின்றனர்.

இனவாத செயற்பாடுகள் தொடர்பாக கவனத்திற்கொண்டு நமது நாட்டிலே வாழும் அனைத்து இன மக்களுக்கும் ஒரு சட்டம் என்ற செயற்பாட்டிலே செயற்படவேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளது. இவை செயற்படுத்தப்படவில்லை எனில்; மீண்டும் ஒரு இருண்டயுகத்திற்கு நமது நாடு செல்ல வேண்டியேற்படும். கடந்த ஆட்சிக் காலத்தின் போது; முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் காணப்பட்டது. அவ்வாறான இனவாத செயற்பாடுகள் நல்லாட்சியிலும் அதிகரித்துக் கணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -