ஆவா சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை : எனது உறுதிமொழி நிறைவேறியது - அமைச்சர் மனோ

யங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட ஆவா குழு சந்தேகநபர்களான பதினோரு யாழ் இளைஞர்களின் வழக்குகள், இன்று பயங்கரவாத தடை சட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதன்படி பதினோரு இளைஞர்களும், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயத்தில் தலையிட்டிருந்த அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது, 

ஆவா குழு உறுப்பினர்கள் என சமீபத்தில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சார்ந்த இளைஞர்களின் விவகாரம், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட வாகனங்களும் மீளளிக்கப்பட்டது., இது தொடர்பில் கடந்த வாரம் என்னை சந்தித்து உருக்கமாக வேண்டுகோள் விடுத்த சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் அளித்திருந்த உறுதிமொழி நிறைவேறியுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழேயே வைக்கப்பட்டிருப்பார்களாயின் இவர்களது எதிர்காலம் ஒரேயடியாக பாழாகியிருக்கும். இவர்களின் இளம் வயது விபரங்களை அறிந்த பிறகே நான் இந்த விவகாரத்தில் தலையிட்டேன். அத்துடன் மீண்டும் பயங்கரவாத சட்டம் பயன்படுத்தப்பட்டு எவரும் இந்த நாட்டிள்கைது செய்யப்பட கூடாது என்பபது எனது கொள்கை நிலைப்பாடாகும். இதன் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று கொள்கை நிலைப்பாட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.

ஆனால், இந்த வழக்குகள் முடியவில்லை என்பதை சந்தேக நபர்களும், யாழ் மக்களும் அறிந்துக்கொள்ள வேண்டும். குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால், இவர்களுக்கு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. விரைவில் இந்த வழக்குகளை யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு மாற்றி தருகிறேன். அதன்பிறகு இந்த வழக்குகள் யாழ் நீதிமன்றங்களுக்கு வரும்போது, உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு இவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்படவேண்டும். 

அதுதொடர்பில் யாழ் மாவட்ட நீதிமன்றங்கள் முறைப்படி கவனத்தில் எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. யாழ் மக்களுக்கு தொல்லை தரும் வண்ணம், மீண்டும் வடக்கில் ஆவா குழு நடவடிக்கைகள் தலை தூக்குமானால், எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக கடுமையான போலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் இங்கே கூறி வைக்க விரும்புகிறேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -