13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் - கெளதமி

நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று தன்னுடைய அதிகாப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி குறிப்பிட்டு இருக்கிறார்.

கமல்ஹாசனும், கெளதமியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கெளதமி.

கமல்ஹாசன் - கெளதமி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனை கெளதமி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி கூறியிருப்பது:

"நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கிற்று. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இத்தருணத்தில் நான் யார் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. அதேவேளையில் எவ்வித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவு. ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவு.

திரைத் துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய விசிறி நான். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்கிறேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன்.

இந்த வேளையில் என்னுடைய அதி முக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார் கெளதமி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -