அபு அலா -
பொதுமக்களுக்கென்று 24 மணி நேர சேவைகளை வழங்குவதில் ஒன்று வைத்தியசேவையாகும். இந்த சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலைகள் உள்ளன. இதற்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம் போன்றவை இயங்கி வருகின்றது. இதில் கடமையாற்றுகிள்றவர்கள் வெறும் சம்பளம் பெருகின்ற அதிகாரிகளாகவோ, வைத்தியர்களாகவோ, உத்தியோகத்தர்களாகவோ மட்டும் நீங்கள் இரிக்கக்கூடாது. இதனை பார்த்துக்கொண்டிருக்கும் அமைச்சராக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர். ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படுகின்ற வைத்தியசாலைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலுள்ள பல வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மிக அன்மையில் அடிக்கல் நடப்பட்டு அதற்கான கட்டிட வேலைகளும் தற்போது செவ்வெனே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இதேவேளை இதில் சில தடைகளும், வேலைகளில் தாமதமும் இடம்பெறுவதை அறியக்கூடியதாவுள்ளது. இந்த செயற்பாட்டினை உயர் அதிகாரிகளாகிய நீங்கள் கவனத்திற்கொண்டு குறித்த வேலைகளைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த அபிவிருத்தி வேலைகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெற வேண்டும். அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்க என்னால் மாத்திரம் முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த வேலைகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாக்க முடியும் என்றார்.
கல்முனை பிராந்தியத்துக்கு கீழ் இயங்கும் வைத்தியசாலைகளின் அபிவிருத்திகளுக்கு மேலதிகமாக 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியினை கல்முனை சுகாதார பிராந்தியத்துக்கு கீழுள்ள அனைத்து பிரதேசங்களையும் உள்ளடங்கியதாகவும் இதில் எவ்வித வேறுபாடுகள் இன்றியும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகவேண்டி சரியான திட்டமிடல் இல்லாமல் எதையும் செய்யக்கூடாது என்று சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், கல்முனை பிராந்தியத்துக்கு கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைகள் தொடர்பிலும், குறித்த நிதி தொடர்பிலும், தற்போது நடைமுறையில் உள்ள செயற்றிட்டங்கள் உள்ளடங்கிய ஓர் அறிக்கையை தயாரித்து எதிர்வரும் 24 ஆம் திகதி திருகோணமலை சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.