இலங்கை சிறுபான்மையினரின் கண்ணியம், தனித்துவம், சமத்துவம், அடிப்படை உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான ஈடுபாட்டை காட்சிப்படுத்த இலங்கை அரசு சில துரித முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் நதேயா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு அவர் மேற்கொண்ட முதலாவது தகவல் சேர்க்கும் விஜயத்தின் இறுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பத்து நாட்கள் மேற்கொண்ட இந்த விஜயத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் வசிக்கும் பல்வேறு சிறுபான்மை இன பிரதிநிதிகளை சந்தித்து தகவல்களை அவர் பெற்றுக்கொண்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்கள், காணப்போனவர்கள் தொடர்பான விடையங்கள், கைப்பற்றப்பட்ட காணிகளை திருப்பிக்கொடுத்தல், தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தல், இராணுவ மயமாக்களை ஒழித்தல் என்பவை மிக அவசரமாக கவனிக்கப்படவேண்டிய விடையங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மையினர் மிகுந்த எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளதாக தெரிவித்தாக அவர், அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாட்டில் சிறுபான்மையினரின் கருத்துக்கள், அபிலாசைகள் சரியான விதத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
மேலும் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசாங்கம் இடையே பாலத்தை உருவாக்கும் முகமாக சுதந்திரமாக இயங்கும் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் நதேயா பரிந்துரை செய்தார்.
இதேவேளை இந்த விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கை 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு தான் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.