வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்காத இடங்களிலும் புத்தர் சிலைகளும், அடையாளங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பது தவறு என்பதை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏனைய மக்களது மதங்களை அகௌரவப்படுத்தக் கூடாது என்று பௌத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் முகத்தில் அறைவதற்கான செயற்பாடாகவே இதனை அவதானிக்க முடிகிறது என்றும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பகல் நடபெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் அந்திசந்திகளில் புத்தர் சிலைகள் மற்றும் அதன் அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த செயற்பாடுகள் தொடர்பில் தமது கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டார்.
நான் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் 20க்கும் மேற்பட்ட தடவை வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அங்குள்ள எல்லா சந்தி, மூலைகளிலும் புத்தர் சிலைகள் மற்றும் அரச மரங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்தேன். அவற்றை வழிபட அங்கு சிங்கள மக்கள் இல்லாத நிலையிலும் அவற்றை அமைத்திருக்கிறார்கள். பிக்கு ஒருவர் இருக்கின்றார் என்பது பிரச்சினையல்ல. இவற்றை அமைக்கும்போது அங்கு சிங்கள மக்கள் இருக்கின்றார்களா என்பதை அவதானிக்க வேண்டியது முக்கியமாகும். தமிழ் மக்களது முகத்தில் அறைவதல்ல பௌத்த சிந்தனை என்பது. இப்படிப்பட்டவைகளை செய்யுங்கள் என்று புத்தர் ஒருபோதும் கூறியிருக்கவில்லை. இன்னொருவரது மதத்திற்கும், இனத்திற்கும் சவால் ஏற்படும் விதத்தில் மதத்தை பயன்படுத்துமாறு எந்த இடத்திலும் கூறப்பட்டிருக்கவில்லை. என தெரிவித்தார்.