காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை அவசியம் -நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

காணாமல்போனோர் பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றியுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

அதேவேளை, ஹஜ் கடமையை நிறைவேற்றி காத்தான்குடி திருப்பிக் கொண்டிருந்த 150 முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கல்மடம் பகுதியில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பிலும் மீள்பரிசீலனை- விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற காணாமல்போனவர்கள்- இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

யுத்தகாலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளனர். குறிப்பாக கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகினர். ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் யூ.எல்.தாவூத் சேர், ஓட்டமாவடி தவிசாளர் புகாரி விதானே போன்ற சமூகத்தின் முக்கியமானவர்கள் பலர் கடத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 150 மேற்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர். அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என எந்தத் தகவலும் இல்லை. 

இவ்வாறு யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் - காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ– தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -