ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகள் பற்றி முதலமைச்சரிடம் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 'அரசு வைத்தியத் துறையை முழுமையாக மீள் கட்டமைப்பும் மறுசீரமைப்பும் செய்ய வேண்டும். அப்போதுதான் சிறந்ததும் சிக்கலில்லாததுமான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும். தனியார் மருத்துவத் துறையை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அதனை சரியாக முகாமைத்துவம் செய்யக்கூடிய சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தால் தனியார் மருத்துவத்துறை மூலமும் நாட்டுக்கு சிறப்பான வைத்திய சேவைகளை வழங்க முடியும். இந்த நாடு அநேக இலவச சேவைகளால் உலகில் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. அதில் முக்கியமானது இலவசக் கல்வியும் சுகாதார சேவையுமாகும். ஆனால், இந்த முதன்மையான இலவச சேவைகளின் பலாபலன்களை நாட்டு மக்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இலவசக் கல்வியை முழுமையாகப் பெற்று அதன் மூலம் முழுமையாகப் பயனடைந்து புத்திஜீவிகளான பலர் இந்த நாட்டுக்கு தங்களது அறிவையும் ஆற்றலையும் சேவைகளையும் வழங்காது புலம்பெயர்ந்துள்ளார்கள்.
இது பாரிய இழப்பாகும். கொழுத்த வருமானம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதால் மட்டும் ஆத்ம திருப்தியை அடைந்து விட முடியாது. இலவசக் கல்வியினால் பயன்பெற்ற புத்திஜீவிகள் இதனை உணர வேண்டும். இந்த நாட்டுக்கு தங்களை கொஞ்சக்காலமாவது அர்ப்பணிக்க அவர்கள் முன்வரவேண்டும். வைத்தியர்களின் தட்டுப்பாடு எல்லா வைத்தியசாலைகளிலும் உள்ளது.
இதனை ஓரளவாவது தீர்த்து வைப்பதற்கு சரியான கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவத் துறையை மீள் கட்டமைப்புச் செய்வதன் மூலமே சிறந்த சுகாதார சேவையை வழங்க முடியும்' என்றார்.