அலட்டிக் கொள்ளாமல் முன்னேறிச் செல்லுங்கள் - அமைச்சர் ஹக்கீம்


ட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை. இவ்வாறான பிரச்சினைகள் உருவெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்தக் கட்சியினுடைய இயக்கத்தை இல்லாமல் செய்யவேண்டும், கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு சித்திரிக்கப்படுகின்றது. இவற்றை பற்றி நாங்கள் அலட்டிக்கொண்டு, அவற்றுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் ஒருபோதும் கட்சியினால் முன்னேறிச் செல்ல முடியாது. 

நாங்கள் உற்சாகமாக கட்சியினுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோமானால், அவை அனைத்தும் தானாகவே தவிடுபொடியாகிவிடும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு கட்சி தொடங்கிய காலந்தொட்டே முகங்கொடுத்து வருகின்றோம். இவற்றை களைந்து உதறித் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்ல முயலவேண்டும். 

சிலர் திடீரென முளைத்து தங்களுக்கு ஏதோ ஞானம் பிறந்து விட்டது போல் புதிய, புதிய விடயங்களை கண்டுபிடிக்கின்றனர். காலத்தை வீணடித்துக்கொண்டு அவற்றை பின்தொடர்ந்து எம்மால் செல்ல முடியாது. கட்சியின் இயக்கத்தை எவராலும் முடக்கிவிட முடியாது.  இதுவரையில் கட்சியின் உச்சபீட கூட்டங்களில் கதைக்கப்படாத பல விடயங்கள் பத்திரிகைகளுக்கு பகிரங்கமாக அறிக்கையாகப் போய்கொண்டிருக்கின்றன. இன்று ஊடகங்களில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு நானாகவே குழுவொன்றை நியமித்திருந்தேன். அதனை தவிர ஒரு வார்த்தையேனும் கட்சியின் கூட்டங்களில் பேசப்படவில்லை. அவ்வாறு பேசப்படாத பல விடயங்கள் இன்று பத்திரிகைகளில் அறிக்கைகளாகவும், கடிதங்களாகவும் பக்கம் பக்கமாக உலாவருகின்றன. 

ஊர்களில் அனாமதேய அமைப்புக்கள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் என்ற பெயரில் கடிதம் எழுதுகின்றார்கள். ஏன் இவ்வாறு பெயர் குறிப்பிடாத, அடையாளத்தை மறைத்து முளைத்தெழுகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ள வேண்டும்? இவர்கள் யார், எத்தகையவர்கள் என்பதை கட்சித் தொண்டர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். இவற்றை தூக்கிப் பிடித்து, கட்சி முகங்கொடுத்த கடின சூழ்நிலைகள் எல்லாம் நீங்கி இப்போது வசந்த காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்கவேண்டிய இந்த பயணத்தில் சோர்வடைந்து, இயக்கம் தடைபட்டு அழிந்து போகவேண்டுமா என்பதை நாம் சிந்திப்பது முக்கியமாகும். 

தலைமை தவறிழைக்க நேர்ந்தால், தொண்டர்கள் கேள்வி கேட்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. மாறாக, பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான், 'தாருஸ்ஸலாம்' உடைய நிலைமை தொடர்பில் ஆராய வேண்டியதில்லை. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே அறிந்ததை ஏதோ புதியதொரு விடயத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கருதி பகிரங்கமாக கடிதம் எழுதுவது எவ்வளவு கீழ்த்தரமான காரியமாகும். எனவே, சுய விளம்பரங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான அறிக்கைகள், கடிதங்கள் தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ளாது இத்தகைய நிலவரங்களிலிருந்து விடுபட்டு, கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டமாக இந்தக் கட்டம் நோக்கப்படுதல் அவசியமாகும்.

எதிர்காலத்திலும் கட்சியினுடைய அரசியல் பிரதிநிதிகள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும். தாங்கள் இருக்கும் சபைகளில் அத்தகைய பிரச்சினைகளை சரிவர இனங்கண்டு அவற்றை உரிய முறையில் கையாண்டு உரிய தீர்வு கண்டு அதனூடாகவும் கட்சியை வளர்க்க வேண்டும்.  சிலர் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும், நேசர்களையும் குறிவைத்து இப்போது செயற்பட தொடங்கியுள்ளனர். அவர்களை தேடிப்போய் பேசுவதும், வருவதுமாக நாடகங்கள் அரங்கேறுகின்றன. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது பென்னாம்பெரிய கட்சி. இந்தக் கட்சியை தனி மனிதர் கையில் எடுப்பதால் ஒருபோதும் அது அழிந்தது கிடையாது. தனி மனிதர்கள் எத்தனையோ பேர் வந்து போயிருக்கின்றார்கள். ஆனால், கட்சி வாழ்கின்றது. ரவூப் ஹக்கீம் போனாலும், கட்சி வாழும். தனி மனிதர்கள் யாரும் இந்தக் கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் போனால், கட்சி இல்லையென்று நினைக்கவும் கூடாது.  சிலர் புதிய, புதிய சித்தாந்தங்களோடு வெளிவந்து பத்திரிகைகளில் வாழலாம் என்று நினைகிறார்கள். திட்டமிட்டபடி, அறிக்கைகளும், கட்டுரைகளும் ஒவ்வொரு பத்திரிகைகளிலும் மாறி மாறி வருவதென்றால் அவை எங்கிருந்து முளைத்தன? இவ்வளவு காலமும் இந்தப் பெரிய பரம இரகசியங்கள் எங்கு ஒளிந்து கிடந்தன? ஒரேயடியாக புற்றுக்குள் இருந்து இத்தனைப் பாம்புகள் எவ்வாறு வெளிவந்தன? எனப் பார்த்தால் இதன் பின்னணி தெளிவாக விளங்கும். 

கடந்த தேசிய மாநாட்டிற்கு பிறகு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவையும் களத்தில் செயலுருப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது. அவ்வப்போது ஒருசில அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்களிலும் அல்லது ஊர் வாரியாக ஏற்பாடு செய்யப்பட்ட வௌ;வேறு நிகழ்ச்சிகளிலும் தலைமைத்துவம் உட்பட ஏனைய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொள்கின்ற நிகழ்வுகள் நடைபெற்ற போதிலும் கூட, கட்சியினுடைய அமைப்பு சார்ந்த அலுவல்களில் எவரும் கவனம் செலுத்தாது, உச்சாகமற்ற நிலைமையே காணப்படுகின்றது. கட்சியினால் பிரத்தியோக இளைஞர் செயலணியொன்றையும் நியமித்து, கடந்த தேசிய மாநாட்டை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இருக்கத்தக்கதாக மிகவும் விமரிசையாக நடத்தி முடித்தோம். 

ஆனால், கட்சியினுடைய இவ்வாறான நிகழ்வுகளை நடத்திய பிறகு, இன்னொரு புதிய நிகழ்வொன்றை ஆரம்பிப்பதற்காக மீண்டும் ஆர்வத்தோடு கட்சிப் பாடல்களை ஒலிபரப்பிகொண்டும், ஆட்களை திரட்டிக்கொண்டும் மாமுலான அரசியலையே நாமும் செய்கின்றோம் என்ற விமர்சனம் பரவலாக இருந்து வருகின்றது. இது உயிரோட்டமுள்ள, பொறுப்புள்ள எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற ஆக்கபூர்வமான விமர்சனம் என்பதை நாங்கள் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். அந்தவகையில் எம் அனைவருக்கும் இருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு என்னவென்றால், இந்தக் கட்சியினுடைய அமைப்பு சார்ந்த வேலைகளை நாங்கள் திறம்பட செய்ய வேண்டியதற்கான சில அடிப்படை விடயங்களை அடையாளம் கண்டு அதில் அனைவரும் ஈடுபடுவதாகும். 

இன்று நாட்டிலுள்ள பிரதானமான கட்சிகள் இரண்டும் தமது கட்சி சார்ந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவதை பத்திரிகைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் பரவலாகக் காணலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்பொழுது அமைப்பாளர்கள் நியமன விடயத்தில் அதிக தீவிரம் காட்டி வருகின்றது. ஏனெனில், அமைப்பாளர்கள் மூலம் கட்சிக்குள் இருக்கின்ற உள்முரண்பாடுகள் குறித்து கண்டறிந்து, சரியான தளத்திலே கட்சியை வழிநடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அதனுடைய உள்நோக்கங்களுள் ஒன்றாக இருந்த போதிலும் கூட, அந்தக் கட்சியினுடைய அமைப்பு சார்ந்த வேலைகளை தீவிரப்படுத்தி அடுத்துவருகின்ற தேர்தலுக்கான தயார்படுத்தலை இப்பொழுதிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சியினுடைய அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புக்களை உருவாக்கிகொள்வது என்ற காரணத்தினாலும் தான் அமைப்பாளர் நியமனத்தில் கவனம் செலுத்தப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கடைத் தெருக்களுக்குச் சென்று கட்சிக்கான உறுப்பினர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது மக்கள் மத்தியில் கட்சி தலைவர்களே நேரடியாகச் சென்று கட்சிக்கான அமைப்பாளர்களை திரட்டும் வேலைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற எங்களுடைய இந்த இயக்கம் எமது அமைப்பு வேலைகளுக்காக மாவட்ட ரீதியான மத்திய குழுக்களின் மூலம் தேவைக்கேற்ப மாவட்ட ரீதியான கூட்டங்களை கூட்டி, பிரதேசவாரியான உறுப்பினர்களையும் சேர்த்து கலந்துரையாடுவது போன்ற விடயங்கள் மட்டும் அவ்வளவு ஆரோக்கியமானவையாகத் தென்படவில்லை. அதேவேளை, பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் கட்சியின் அமைப்பு வேலைகளை செய்வதற்காக அன்று தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு ஊரிலும் ஒரு கிளையும், அந்தக் கிளைகளுக்கான குழுக்களும், அக்குழுக்களின் சார்பில் கூட்டங்களும் அவை தொடர்பான அறிக்கைகளும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு இது நாள் வரை கிரமமாக அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

ஆனால், கட்சியினுடைய பலமான பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் இவ்வாறான ஒழுங்கான நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் முஸ்லிம் அல்லாத பிரதேசங்களில் மிக சிறப்பாக இயங்கிக்கொண்டு செல்கின்றன. அவற்றின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டாலும் கூட, அவற்றை விளக்குவதற்கும், உரிய தீர்வுகளை பெறுவதற்கும் கட்சியின் தலைமையகத்திற்கு வருகின்றார்கள். இவ்விடயம் தொடர்பில் நாம் தீவிர கவனம் செலுத்தி கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பையும், மாதர் காங்கிரஸ் அமைப்பையும் கட்டியெழுப்புவது அவசியமாகும். இதனை கடந்த பேராளர் மாநாட்டின் போதும் தலைமை உரையில் வலியுறுத்தி இருந்தேன். 
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது. மறைந்த தலைவருடைய காலத்திற்குப் பின்னர் இந்தக் கட்சியின் அடுத்த தலைமுறையினருக்கு கட்சி சம்பந்தமாகவும், கட்சியின் கொள்கைகள் சம்பந்தமாகவும், இதனுடைய இருப்பு சம்பந்தமாகவும் போதிய விளக்கமும், தெளிவும் இல்லாத நிலையில் ஒரு தலைமுறை வளர்ந்துகொண்டு வருகின்றது. 

இந்த நிலையில் எங்களையும் ஒரு மாமுல் கட்சியாக அடையாளப்படுத்திக் கொண்டு, இந்தக் கட்சியும் கடந்த கால உணர்வுகளின் தடங்களின் மீது தான் ஓடிக்கொண்டிருக்கின்றது என்றவாறு எல்லோரும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். புதிய தலைமுறையினருக்கு இந்தக் கட்சியினுடைய வரலாற்றுப் பின்னணி, கட்சியின் பார்வை என்பன தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த அடிப்படையில் தான் திருகோணமலையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடொன்றை மிக விமர்சையாக நடத்தியிருந்தோம். அந்த மாநாட்டின் போது கட்சியின் மூத்த போராளி ஒருவர் என்னிடத்தில் பிரேரணையொன்றை வடிவமைத்து முன்வைத்தார். 

அதுதான் 'வீட்டுக்கு வீடு மரம்' என்ற திட்டத்திற்கான மும்மொழிவுப் பிரேரணையாகும். அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவதாக அக் கூட்டத்திலேயே அறிவித்திருந்தோம். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவே எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் ஆம் திகதி கந்தளாய் பிரதேசத்தில் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த 'வீட்டுக்கு வீடு மரம்' என்ற திட்டத்தின் மூலம் வீடுகளுக்குச் சென்று அந்த வளவில் நடப்படும் மரத்தின் மூலம் வீட்டிலுள்ள அனைவரையும் கட்சியுடன் இணைத்து, அந்த வீடு எங்களது மரத்தை எவ்வாறு பராமரிக்கின்றதோ அதுபோல் அக்குடும்பத்தினரின் தேவைகளையும், பிரச்சினைகளையும் கட்சி கண்டறிந்து பராமரிக்கும். 

அத்தோடு தலைவருடைய 1988 ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'எமது பார்வை' என்ற புத்தகத்தையும் தேசிய ஜக்கிய முன்னணியையும் உயிர்த்தெழ செய்யும் வகையில் கையளிக்கவுள்ளோம். இதனால் கட்சியின் கொள்கைகள் ஸ்தாபிக்கப்பட்ட நியாயங்கள் போன்ற விடயங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். இந்தக் கட்சி மக்கள் மத்தியில் வாழும். அடுத்த பரம்பரைக்கு இந்தக் கட்சியின் தாற்;பரியம் என்னவென்பது புரியவேண்டும். அதனை புரிய வைப்பதற்கான பயணமாக இந்த பயணத்தை மாற்ற வேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற முடியாது என்ற அடிப்படையில் முன்னோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மிகவும் உறுதியுடன் ஈடுபட வேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில் கண்டி, கட்டுகஸ்தோட்டையில், ஞாயிற்றுக்கிழமை (24) கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -