தமிழ் மக்களுக்கு ஒரு நாகரீக அரசியல் முகவரியை தேசிய அரங்கில் நாம் கொண்டு வந்துள்ளோம் -மனோ



டக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நாகரீகமான அரசியல் அடையாள முகவரியை தேசிய அரசியல் அரங்கில் கொண்டு வந்ததில் பெரும்பங்கை ஆற்றியது, நமது கட்சியே என்பதை நாம் பெருமையுடன் மனதில் கொள்ள வேண்டும். இன்று அந்த அரசியல் முகவரி, தமிழ் முற்போக்கு கூட்டணியில், சகோதர கட்சிகளுடன் நாம் வகிக்கும் பாத்திரத்தின் மூலம் மென்மேலும் வலுவடைந்துள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்தியக்குழு கூட்டம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையில் கட்சி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையின் தமிழர் ஜனத்தொகை 32 இலட்சம். இதில் சரிபாதி 16 இலட்சம் வடக்கு கிழக்கிலும், அடுத்த சரிபாதி 16 இலட்சம் தென்னிலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்களிலும்,குறிப்பாக மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் வாழ்கிறார்கள். இருந்தாலும் தமிழர் பிரச்சினை என்பது ஆக வடக்கு கிழக்கில் மாத்திரமே மையம் கொண்டுள்ளது என்ற ஒரு மயக்க கருத்து நாட்டில் நிலவியது. அதேபோல் தென்னிலங்கை தமிழர் பிரச்சினை என்றால் அது ஆக, மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க சம்பள பிரச்சினை மட்டுமே என்ற ஒரு மயக்கமும் இருந்து வந்தது.

இதையெல்லாம் நாம் இன்று கவனமாக தூரநோக்குடன் சிந்தித்து பணியாற்றி மாற்றியுள்ளோம். வடக்கு கிழக்கில் வசிக்கும் எங்கள் உடன்பிறப்புகளின் முக்கியத்துவம் குறைந்துவிடாமலும்,அதேபோல் தோட்ட தொழிலாளரின் தொழிற்சங்க தேவைகளின் முக்கியத்துவமும் குறைந்துவிடாமலும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நாகரீகமான அரசியல் அடையாள முகவரியை நாம் தேசிய அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் உருவாக்கி வருகிறோம். 

எமது கட்சியின் பாத்திரத்தையும், வரலாற்றையும் கவனமாக அவதானிக்கும் எவருக்கும் இது புரியவேண்டும். அந்த பாத்திரம் இன்று, தமிழ் முற்போக்கு கூட்டணியில், சகோதர கட்சிகளுடன் நாம் வகிக்கும் கூட்டு பாத்திரத்தின் மூலம் மென்மேலும் வலுவடைந்துள்ளது. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், வடமாகாணசபை என்ற நிறுவனத்தின் தலைமையுடனும் நாம் வரலாற்றுரீதியாக கொண்டுள்ள நட்பு மற்றும் புரிந்துணர்வு மூலமும் மென்மேலும் வலுவடைந்து உள்ளது. இது ஜனநாயக மக்கள் முன்னணியின் வெற்றி. எத்தனையோ துரோகங்கள், சவால்கள் மத்தியிலே நாம் பணித்துள்ள பயணத்தின் வெற்றி. என்னுடைய சகபயணிகளான உங்கள் வெற்றி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -