ஒரு மாதத்தில் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிப்பேன் - அமைச்சர் றிஷாட்

எம்.வை.அமீர்-

டந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பில் தேங்கியுள்ள சுனாமியினால் கொண்டுசெல்லப்பட்ட ‘கல்’ போன்ற எச்சங்களை துப்பரவு செய்யும் வேலைத் திடடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவடடத்திற்கான இப்தார் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் 2016-06-24 ஆம் திகதி அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரையிலும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய முற்றத்திலும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் றிஷாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுரைச்சோலையில் கட்டப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு வழங்கப்படாமல், பாழடைந்து கிடக்கின்ற குறித்த வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என, நாங்கள் இந்த நல்லாட்சி அரசுடன் இணையும்போது ஒப்பந்தம் செய்திருந்தோம். கடந்தகாலங்களில் அதற்கான முன்னெடுப்புகளை செய்து வந்தோம். இன்றுகூட பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேசினோம். அவர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இவ்வீட்டுத்திட்டத்தை, மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இங்குள்ள 3000 பேருக்கு தொழில் வழங்கக்கூடிய தொழில்பேட்டை ஒன்றை சம்மாந்துறையில் அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு அங்குள்ள அரசியல்வாதி எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இருந்தாலும் யார் ஆதரித்தாலும் இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு வருடத்துக்குள் அம்பாறை மாவட்டத்தில் தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு உதவக்கூடிய விதத்தில் உதவிகளை தேடிச்சென்று அவற்றைப்பெற்று மக்களது கஷ்ட்டங்களை போக்கவேண்டிய மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள், கிடைக்கவிருக்கும் உதவிகளை தடுக்க முயற்சிப்பது வேதனையான விடயம் என்றும் தெரிவித்தார்.

தடைகள் தங்களுக்கு பொருட்டல்ல என்று தெரிவித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாகவும் அதற்காக நீங்கள் பிராத்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சரைக் கொண்டுவந்து, மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதேபோல இப்பிராந்திய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தாங்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தொடர்புபட்ட அமைச்சர்களைக் கொண்டுவந்து தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

சீனித் தொழிலுடன் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் கொண்டுசென்றேன். அதற்கான உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அந்த பிரச்சினைகளும் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் பாராளமன்ற பிரதிநிதித்துவமோ மாகாணசபை பிரதிநிதித்துவமோ இல்லாத போதிலும் தேசிய மட்டத்தில் எங்களிடம் இருக்கும் பலத்தைக்கொண்டு அம்பாறை மாவட்டத்திலும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அழுத்தமாக தெரிவித்தார்.

றமழான் சிந்தனையை மருதமுனை ஜம்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க்எம்.ஐ.எம்.ஹுசைனுதீன் (றியாலி) அவர்கள் வழங்கினார்.

சுமார் 4000 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்தார் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார், கனிய மணல் கூட்டுத்தாப்பான தலைவரும் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத், லக்சல தலைவரும் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் உபவேந்தருமான கலாநிதிஎஸ்.எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்டவர்களும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் அமைச்சின் கீழுள்ள பல நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும்முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -