ஹாசிப் யாஸீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் டிபென்டர் வாகனம் தொடர்பில் தான் ஊடகங்களில் ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலையடைவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று (23) வியாழக்கிழமை ஹரீஸின் இல்லம் சென்று தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில்,
கொலை மட்டும் பல்வேறு மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பிரதி அமைச்சர் ஹரீஸின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காணப்பட்டதாக கூறி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மு.கா தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டை அடுத்து பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடந்த சம்பவம் குறித்து பிரதி அமைச்சர் ஹரீஸின் இல்லத்திற்கு நேரடியாக சென்று தனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தனக்கும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்குமான பிரச்சினையாகும். இதனை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் இருவரும் அமைச்சர்கள் என்ற ரீதியில் இச்சம்பவத்தால் நமக்குள்ள நட்பில் பாதிப்பு இருக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.