முப்படை முகாம்களுக்கு செல்ல விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதன் முறையாக திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கடற்படையினர் வழங்கிய உணவை பிரமாதமென பாராட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய பொருளாதார வளங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டமொன்றின் போதே கிழக்கு முதலமைச்சர் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றுள்ளார்.
அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வொன்றுக்கு கடற்படையினர் அழைப்பு விடுக்காமை தொடர்பிலும் ஆளுனரின் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரை மேடைக்கு செல்லவிடாது கடற்படை தளபதி தடுத்தமையினாலும் அவர் மீது கடும் சினம் கொண்டு முதலமைச்சர் கடற்படை தளபதியை திட்டித்தீர்த்த செய்தி வெளியாகியிருந்தது.
அதனால் கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விலும் முப்படையினர் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் முதலமைச்சரும் முப்படை தளங்களுக்குள் நுழைய முடியாது என்றும் முப்படையினர் அதிரடியாக அறிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமையவும் இராணுவத்திற்கான அதிகாரங்கள் குறித்து அவதானம் செலுத்தியும் அரசாங்கம் கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையின் பாதுகாப்பு அவசியம் என்றும் முப்படை தளங்களுக்குள் நுழைவதற்கு கிழக்கு முதலமைச்சருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தடை நீக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றுள்ளார். சிங்கப்பூர் முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் குழு நேற்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே கிழக்கு முதலமைச்சருக்கு கடற்படை முகாமுக்கு பகல் உணவு விருந்துபசாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அழைப்பை ஏற்று முதலமைச்சர் முகாமிற்குள் பிரவேசித்துள்ளார்.
சிங்கப்பூர் முதலீட்டுச் சபை கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தகுந்த பொருளாதார வளங்கள் தொடர்பில் நடத்திய இந்தச் சந்திப்பில் அபிவிருத்தி உபாய முறைமைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் நிறைவில் கடற்படை முகாமிற்குள் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டி ருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படையினரின் உணவு மிக்க சுவையாக இருந்தது என பாராட் டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.