நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித ரமழான் நோன்பு கால விடுமுறை இன்று வழங்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் இப்பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்தார்.
இதேவேளை, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் விசேட பணிப்பின் பேரில், இக்காலப் பகுதிக்குள் அண்மைய வெள்ளத்தினாலும் மண்சரிவுகளினாலும் இழக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக புதிய புத்தகங்களை அச்சிட்டு வழங்க கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுதவிர ஒவ்வொரு மாணவ மாணவருக்கும் இரண்டு பாடசாலை சீருடைகள் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்களுக்குத் தேவையான பாடசாலைப் பைகள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்களும் நலன் விரும்பிகளும் முன்வந்துள்ள நிலையில், இந்த நன்கொடைகள் யாவும் கல்வி அமைச்சினால் வலயக் கல்விப் பணிமனைகள் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.