அரநாயக்கவில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தின் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக விலகிக் கொண்டதை அடுத்து பிரதேசத்தில் மயான அமைதி நிலவத் தொடங்கியுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் வேடிக்கை பார்க்கவும், நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அரநாயக்க நோக்கி படையெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் தற்காலிக பொலிஸ் சோதனைச் சாவடியொன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தற்போது இராணுவத்தினர் விலகிச் சென்றதை அடுத்து பொலிஸாரும் விலகிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களும் தற்போது அந்த பகுதிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு வசிப்பிடம் இல்லாத நிலை காரணமாக அவர்களும் பெரும் நிர்க்கதியான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
மண்சரிவு நிகழ்ந்த பகுதியில் ஏராளமான சடலங்கள் கடைசி வரை கண்டுபிடிக்கப்படவேயில்லை. அழிந்து போன ஊரைப் போன்றே அவர்களின் நினைவுகளும் அழிக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் அனர்த்தம் ஒரு பக்கம் அதன் பாதிப்புகள் மறுபக்கமாக பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.