எமக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகள் சாக்கடைக்குள் இருந்துகொண்டே கல்வி கற்க வேண்டும் - ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி,ஜுனைட்.எம்.பஹ்த்-
மது பிள்ளைகள் உயர்ந்த கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் எமக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகள் சாக்கடைக்குள் இருந்து கல்வி கற்க வேண்டும். காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் விசேட உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி கல்வி கோட்டத்திற்குட்பட்ட மெத்தைப்பள்ளி வித்தியாலயம், சாவிய மஹா வித்தியாலயம் மற்றும் பாலமுனை அலிகார் மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிய கட்டடங்களுக்கான அடிகல் நாட்டுவிழா நிகழ்வு இன்று திங்கட்கிழமை (30.05.2016) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ULMB. முபீன் (BA) அவர்களும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம், வலயக்கல்வி பணிப்பாளர் சேகு அலி மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

ஆட்சி மாற்றத்தின் பின் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடானது மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியல் அமைப்பில் 13 வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களுக்கு அதிகமான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களுக்கு மாத்திரம் அவ்வதிகாரங்களைப் பாவிக்க விடாமல் தடுக்கின்ற அல்லது அவ்வதிகாரங்களை முடக்குகின்ற செயற்பாட்டை அவதானிக்க முடிகின்றது.

உண்மையில் பாடசாலை என்பது ஒரு மிகவும் சிறந்த சுற்று சூழலில் அமைக்கப்பட வேண்டும். ஒரு பாடசாலையை கழிவு நீர் செல்லும் ஓடை ஒன்றின் மேல் அமைத்து உலகிலேயே முதன்முறையாக கழிவு நீர் செல்லும் சாக்கடையின் மேல் அமைக்கப்பட்ட பாடசாலையாக ஒரு பாடசாலை காணப்படுமாயின் அது காத்தான்குடி பாத்திமா பாலிகா பாடசாலையாகத்தான் இருக்க முடியும்.

மழை காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து பாடசாலைக்கு செல்லும் பாதையின் மேலாகச் செல்லும் அசுத்தமான நீரின் காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது, மழை காலங்களில் இச்சாக்கடையிலிருந்து வெளியேறும் விச ஜந்துக்களினால் மாணவர்கள் உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. 

உஸ்ன காலங்களில் இவ்வோடையிலிருந்து வீசுகின்ற துர்வாடை காரணமாக அங்கு பாடசாலை நடத்துவதே சுகாதாரத்திற்கு சீர்கேடு என்று பொது சுகாதார வைத்தியர் அறிவுறுத்தி இருந்தும் இவ்வளவு காலமாக அப்பாடசாலை இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதென்பது மிகவும் அநீதி என்பதை அறிந்து கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சரை தொடர்பு கொண்டு இது பற்றி ஆலோசித்த போது இப்பாடசாலை அருகே உள்ள சிறுவர் பூங்காவை அகற்றிவிட்டு அவ்விடத்தில் பாடசாலையை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இப்பூங்காவை இவ்விடத்திலிருந்து அகற்றினாலும் பிறிதோர் இடத்தில் இப்பூங்காவை அமைத்துத்தர வேண்டுமென நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பூங்காவினை காத்தான்குடி ஆற்றங்கரையில் அமைப்பதற்கு 40 இலட்சம் ரூபாவை ஒதுக்கித்தந்ததுடன் இப்பாடசாலைக்குரிய நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கென முதற்கட்டமாக 55 இலட்சம் ரூபாவினையும் அதன் பிற்பாடு 1 கோடி 35 இலட்சம் ரூபா செலவில் இன்னுமொரு கட்டிடத்தை இப்பாடசாலைக்காக அமைத்துத்தருவதற்கும் எமது மாகாண முதலமைசச்ர் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.

நாங்கள் இப்பூங்காவை அகற்றுவதற்கு முன்பே அப்பூங்காவை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்துவிட்டு இப்பூங்காவை தற்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றுவதற்கு முற்பட்ட காரணம் இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற 400 மாணவர்களும் தங்களது கல்வியை எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இங்கு கல்வி கற்கின்ற மாணவர்களின் சுகாதார நலன் கருதியுமே ஆகும்.

இருப்பினும் இதுவரை காலமும் நகர சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட ஒரு சிறுவர் பூங்காவின் காணியானது ஒரு அரச காணி என்பதுடன் திடிரென ஒரு அரச காணியின் உரிமையாளராக ஒர் அரசியல்வாதியின் தலைமையில் இயங்குகின்ற பொது நலப்போர்வையில் காணப்படும் அரசியல் சார் பொது நிறுவனம் மாறி இருக்கின்றது என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே மனம் வேதனையடைகின்றது.

இந்த 400 மாணவர்களினதும் நலன் கருதி எம்மால் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இம்மாணவர்களுக்கான கட்டிடத்தை எங்கு அமைக்கப்போகின்றோம்? எதிர்காலத்தில் ஒதுக்கப்படவிருக்கும் 1 கோடி 35 இலட்சம் ரூபவினைக்கொண்டு அமைக்கப்பட இருக்கும் கட்டிடத்தை எங்கு அமைக்கப்போகின்றோம்? பாடசாலை இடமாற்றப்படாவிட்டால் பாதிக்கப்படுவது இங்கு கல்வி கற்கும் 400 மாணவர்களினதும் கல்வி என்பதையும் தொடர்ந்து இப்பாடசாலை இவ்விடத்திலேயே காணப்படுமாயின் கெட்டுப்போவது மாணவர்களது சுகாதாரம் என்பதையும் சிந்திக்க மறந்து விட்டனரே!

நாங்கள் எமது பிள்ளைகள் கல்வி கற்கின்ற சூழல் ஆரோக்கியம் உள்ளதாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற அதேவேளை இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற 400 மாணவர்களும் சுகாதார ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் எனத்தெரிந்தும் அவர்கள் தற்போது சாக்கடையின் மீதுள்ள பாடசாலையில்தான் கல்வி கற்க வேண்டுமென நிர்பந்திப்பது எவ்வளவு மனிதாபிமானமற்ற விடயம்.

அதே நேரம் திறமையான ஏழை மாணவர்கள் எதிர்காலத்தில் நோயுற்ற சமூகமாக மாறுவதற்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.

எமது பிள்ளைகள் உயர்ந்த கல்லூரிகளில் கல்வி கற்க வேண்டும் ஆனால் எமக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகள் சாக்கடைக்குள் இருந்துகொண்டே கல்வி கற்க வேண்டும் என்ற சிந்தனை மாறவேண்டும்.

நாம் சமூகத்தைப்பற்றி சிந்திபவர்கள் என்றால் நாம் எதை சமூகத்திற்கு முன்னிறுத்தி செய்கின்றோம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். வெறுமனே அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை பிழையாக வழிநடாத்தக்கூடாது.

இன்று மாத்திரம் 2 கோடி 33 இலட்சம் பெறுமதியான அபிவிருத்திகளை தொடங்கி வைத்துள்ளோம். இதில் 1 கோடி 10 இலட்சம் ரூபாய் நிதி காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திற்கும், 35 இலட்சம் ரூபாய் சாவியா வித்தியாலயத்திற்கும், 55 இலட்சம் ரூபாய் பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கும், 10 இலட்சம் ரூபாய் அல்ஹிரா வித்தியாலயத்திற்கும், 23 இலட்ச ரூபாய் பாலமுனை அலிகார் வித்தியாலயத்திற்கும் ஒதுக்கப்பட்டதுடன் காத்தான்குடியையும் அதனை சூழ உள்ள கிராமங்களையும் பல வகைகளிலும் அபிவிருத்தி செய்வதற்காக 20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என தனதுரையில் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -