ஹக்கீம் ஹசனலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-01)

லங்கை அரசியலில் செயலாளர்கள் தங்களது கட்சியுடன் முரண்படுவது தோற்று நோய் போன்று பல கட்சிகளிடையே பரவியுள்ளது. இந்த தொற்று நோய் மு.காவையும் விட்டு வைத்ததாக இல்லை. அமைச்சர் ஹக்கீம் மு.காவின் தலைமையை பொறுப்பேற்றது முதல் செயலாளர் பதவியை அலங்கரித்து வந்த ஹசனலி தற்போது அக் கட்சியுடன் முரண்பட்டு அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக களத்துடுப்பாட்டம் செய்து வருகிறார்.அமைச்சர் ஹக்கீம் ஒரு கருத்தை வெளியிடும் போது அதற்கு எதிராக பலத்த அறிக்கைளும் ஹசனலியின் பக்கத்திலிருந்து நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இந்த அறிக்கைகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் மு.கா செய்த மோசமான செயற்பாடுகள், இரகசியங்கள் வெளியாவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் அறிக்கைகள் தொடர்பில் எதுவித கருத்துக்களும் சொல்லாமல் மௌனம் பேணுவதால் தொடரான கருத்து மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹசனலியின் அறிக்கைகளுக்கு அமைச்சர் ஹக்கீம் மறுப்புத் தெரிவிக்கும் போது தனது கருத்தை நிறுவ ஹசனலி சில உண்மைகளை கக்கி விடுவார் என்ற அச்சத்தில் தான் அமைச்சர் ஹக்கீம் மௌனம் காக்கின்றாரோ தெரியவில்லை.

எது எவ்வாறு இருப்பினும் இது வரை இவர்களின் மோதல்கள் ஹசனலியை கட்சியை விட்டும் நீக்கியதை மாத்திரமே மையப்படுத்தியுள்ளது. முரண்பாட்டின் காரணமாக ஒருவர் இன்னுமொருவர் மீது தேவையற்ற வசைகளை அள்ளி வீசும் நாகரீகமற்ற செயற்பாடுகள் பல அரங்கேறிக்கொண்டிருக்கும் இக் காலத்தில் அவைகள் எதுவும் இவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்காமை இருவரினதும் நாகரீகங்களின் தரத்தை உறுதி செய்கிறது. இது தொடருமா என்ற வினாவிற்கு அவர்களது எதிர்கால செயற்பாடுகளே பதிலைத் தரும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.காவிற்கு இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்தது. இவ் இரண்டு தேசியப்பட்டியல் மூலமாக மு.காவிற்கு கிடைத்த நன்மையை விட தீமைகள் தான் அதிகமெனலாம். ஐ.தே.கவின் தேசியப்பட்டியலுக்கு மு.கா சார்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் சல்மான், ஹாபிஸ் ஆகிய இருவரினதும் பெயர்கள் ஒரு சம்பிரதாயத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதெனலாம்.

அவர்கள் இருவரும் தற்காலிக தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது. மு.காவிற்கு இரண்டு தேசியப்பட்டியல் கிடைப்பதற்கான சாதகமான சூழ் நிலையே காணப்பட்டது.இதிலிருந்து நிஸாம் காரியப்பர்,ஹசனலியின் பெயர்களே தேசியப்பட்டியல் வழங்கும் நோக்கோடு இடப்பட்ட பெயர்களாகும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

இதில் நிஸாம் காரியப்பரின் பெயர் மூன்றாவது முறை இடப்படுகின்ற போதும் இது வரை அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது. இதனை வைத்துப் பார்க்கும் போது நிஸாம் காரியப்பருக்கும் தேசியப்பட்டியல் வழங்கப்படலாம் அல்லது வழங்கப்படாமலும் விடலாம். தேசியப்பட்டியலிலுள்ள நான்கு பெயர்களையும் ஒரு மித்து வைத்து சிந்திக்கும் போது இம் முறை மு.கா தலைமை ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.அமைச்சர் ஹக்கீம் தேர்தலுக்கு முன்பு தனக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி அளித்ததாக ஹசனலி பகிரங்க அறிக்கைகள் மூலம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை எல்லாம் வைத்து சிந்திக்கும் போது தனக்கு இம் முறை தேசியப்பட்டியல் நிச்சயம் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் ஹசனலி இருந்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதன் உலகில் யார் தான் உளர்? அதீத எதிர்பார்ப்புகள் தான் முரண்பாட்டின் முதற் படியாகும்.

தேசியப்பட்டியலின் முதற் சுற்றில் தேசியப்பட்டியலுக்காக தேர்தல் ஆணையாளரிடம் பரிந்துரைக்கப்பட்டவர்களும், அக் குறித்த தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்களையுமே நியமிக்கலாம். இந்த இரு வகையினருக்குள் அமைச்சர் ஹக்கீம் யாருக்காவது தேசியப்பட்டியலைக் கொடுத்தால் அதனை பிழை என்றோ ஏமாற்று வேலை என்றோ கூற முடியாது.அதில் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமா இல்லையா என்பதை நோக்க வேண்டிய கோணம் வேறு.

கடந்த தேர்தலில் மு.கா திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் மாத்திரமே எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது.தோல்வியைத் தழுவியவர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இவ் இரு மாவட்டங்களை மாத்திரமே மு.கா கருத்திற் கொள்ள வேண்டும். தற்போது மு.கா இவ்விரு வகையினருக்கும் அப்பால் மூன்றாம் வகையினருக்கு தேசியப் பட்டியலைப் பகிர சிந்திக்கும் போதே எதற்கு மு.கா ஹசனலியின் பெயரை தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட தேசியப்பட்டியலில் இணைத்தது என்ற வினா எழுகிறது.இங்கு மூன்றாம் நபாரக ஆட்டாளைச்சேனை, கல்குடா ஆகியவற்றிற்கு தேசியப்பட்டியல் வழங்க சிந்திப்பதையே குறிப்பிடுகிறேன்.

மு.கா மூன்றாம் நபரை தேசியப்பட்டியல் பகிர்வில் இணைக்கும் போது அத் தேசியப்பட்டியலில் ஹசனலியின் பெயரை டம்மியாக இணைத்துள்ளது என்ற அர்த்தத்தை தான் வழங்குகிறது.சிலரை டம்மியாக பெயரிடுவது சில சவால்களை எதிர்கொள்ள சிறந்த வழி முறையாகும். எவரும் தான் நினைத்த எல்லோரையும் டம்மியாக பெயர் குறிக்க முடியாது.

குறித்த டம்மியாக பெயரிடப்படுபவர் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவரை டம்மியாக பெயரிடல் வேண்டும்.ஹசனலியின் நாமம் மிகுந்த மரியாதைக்குரியது என்பதாலும் ஏற்கனவே ஹசனலி தேசியப்பட்டியல் மீது குறிவைத்துள்ளதாலும் அவரின் பெயர் டம்மியாக பெயரிடப் பொருத்தமற்றதாகும்.மேலுள்ளவைகளிலிருந்து ஹசனலியை ஏமாற்றவே இப் பெயர் பரிந்துரை நடந்தேறியுள்ளதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.

இரு முறை ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கியுள்ளதால் மூன்றாவது முறையும் அவருக்கு தேசியப்பட்டியலை வழங்க வேண்டிய அவசியமில்லை என சிலர் கூறுகின்றனர்.பிரதி அமைச்சர் ஹரீஸிற்கு மூன்றாவது முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டி இட அனுமதி வழங்க முடியுமாக இருந்தால் ஏன் ஹசனலிக்கு மூன்றாவது முறை தேசியப்பட்டியல் வழங்க முடியாது.

பிரதி அமைச்சர் ஹரீஸ் 2004ம் ஆண்டு மு.காவை விட்டு விலகாமல் இருந்திருந்தால் அம் முறையும் அவருக்கு மு.காவில் போட்டி இட அனுமதி வழங்கப்பட்டு இம் முறை நான்காவது முறையாக மு.கா சார்பாக போட்டியிட்டிருப்பார்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா சார்பாக போட்டி இட்ட பலரும் பல தடவைகள் தேர்தலில் போட்டி இட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.கா ஒரு குறித்த தொகுதி வேட்பாளர்களையே மீண்டும் மீண்டும் களமிறக்குகின்றது என்பதிலும் பலத்த விமர்சனங்கள் உள்ளன.இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீமின் காதைத் துளைக்காது ஹசனலிக்கு மூன்றாவது முறை தேசியப்பட்டியல் வழங்குவதே கண்ணைத் தைத்ததேன்? மு.கா அம்பாறை மாவட்டதில் ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதியளிப்பதும் அக் குறித்த நபருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்குமிடையே பெரிதான வேறுபாடுகளில்லை.

பொதுவாக ஹசனலியை தேர்தல்களில் களமிறக்காது இரு முறை தேசியப்பட்டியல் வழங்கியமையானது அவரது மக்கள் செல்வாக்கை வெளியுலகத்திற்கு வெளிக்காட்டாமல் பெட்டிப் பாம்பாய் அடக்குவதற்கான மு.கா தலைவரின் உத்தியாகவும் இருந்திருக்கலாம். ஹசனலியையும் ஆரம்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிடச் செய்திருந்தால் அவரும் ஒரு மக்கள் செல்வாக்குள்ள பிரதிநிதி போன்று மக்களிடையே தோற்றம் பெற்றிருப்பார்.

பொதுவாக ஒரு கட்சியின் செயலாளர் பதவியில் உள்ளவர் மிகவும் திறமை வாய்ந்தவராக இருப்பதால் குறித்த கட்சிகள் தங்களது செயலாளரை குறைந்தது தேர்தலிலாவது போட்டியிடச் செய்யும்.அம்பாறை மாவட்டத்தில் மு.கா என்ற அஷ்ரப் உருவாக்கிய கட்சிக்காகவே மக்கள் தங்களது வாக்குகளை மு.காவின் மடியில் அள்ளிக் கொட்டுவது யாவரும் ஏற்றுக்கொண்டதொரு விடயம்.

இம் முறை பைசால் காசீமிற்குப் பதிலாக ஹசனலியை களமிறக்கிருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார்.கடந்த தேர்தலில் ஹசனலி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்லவே அதிகம் விருப்பம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அவ்வாறு ஹசனலியை தேர்தலில் களமிறக்கிருந்தால் பைசால் காசீம் மு.காவோடு முரண்பட்டு வேறு வழியில்லாது அ.இ.ம.காவுடன் இணைந்திருப்பார் எனலாம்.

இது மு.காவிற்கு எதிரான சிறு அதிர்வுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் ஆசையைக் காட்டி மோசம் செய்யும் போது ஹசனலியும் முரண்பட்டு வேலி பாய வாய்ப்புள்ளது. எனவே,இங்கு எழுகின்ற வினா மு.காவிற்கு அவசியமானவர் ஹசனலியா? அல்லது பைசால் காசிமா? என்பதாகும்.

அந்த வகையில் பார்க்கும் போது அன்று தொடக்கம் இன்று வரை கட்சி மாறாத கட்சியின் செயலாளருக்கே மு.கா அதிகம் முன்னுரிமை வழங்கிருக்க வேண்டும்.பைசால் காசிம் இடையில் மரத்தை விட்டுப் பாய்ந்து முயலில் பாராளுமன்றம் பயணிக்கப் புறப்பட்டவர். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இரு தடவைகள் மு.காவில் போட்டி இட்டு பாராளுமன்றமும் சென்றுள்ளார்.எப்படிப் பார்த்தாலும் இம் முறை பைசால் காசிமைத் தவிர்த்து ஹசனலிக்கு தேர்தலில் போட்டி இட ஆசனம் வழங்கிருக்கலாம் என்ற கருத்தே சற்று கனக்கின்றது.

இப்படியான வாதம் எழுகின்ற போது ஹசனலி மக்கள் செல்வாக்கு சற்றுக் குறைந்தவர் பைசால் காசிம் மக்கள் செல்வாக்குள்ளவர் போன்று ஒரு சிலர் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்.2008ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டி இட்ட ஹசனலி அம்பாறை மாவட்டத்தில் மிக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்குத் தெரிவாகிருந்தார்.

அவர் அந் நேரத்தில் பெற்ற வாக்குகளை மு.கா வேட்பாளர்களால் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.ஹசனலி அந் நேரத்தில் பெற்ற வாக்குகளை அவருக்குச் சொந்தமான வாக்குகளாக குறிப்பிட முடியுமா என்ற வினா எழுந்தாலும் பைசால் காசிம் போன்றவர்கள் பெற்ற வாக்குகள் அவரது செல்வாக்கின் நிமிர்த்தம் பெறப்பெற்றவை என்றால் ஹசனலி அந் நேரத்தில் பெற்ற வாக்குகளும் அவரது செல்வாக்கின் நிமிர்த்தம் பெறப்பெற்றவையே.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காவை எப்படி எதிர்கொள்வதென்ற சிந்தனையே மு.காவினரிடம் மேலிட்டுக் காணப்பட்டது.அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைத் தொகுதியில் முன்னாள் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரும் கல்முனைத் தொகுதியில் அக் கட்சியின் செயலாளர் உட்பட பல முக்கிய புள்ளிகள் அ.இ.ம.காவிற்கு முட்டுக் கொடுத்திருந்த போதும் பொத்துவில் தொகுதியில் அதற்கு பலமிக்க முட்டுக் கொடுப்புக்கள் இருக்கவில்லை.

பொத்துவிலில் அ.இ.ம.கா சார்பாக எஸ்.எஸ்.பி மஜீத் இருந்தாலும் அவரது செல்வாக்கு பொத்துவிலுக்குள் மாத்திரமே எல்லைப்படுத்தப்பட்டிருந்தது. மு.கா பைசால் காசிமிற்கு தேர்தலில் போட்டி இட அனுமதியளிக்காது அவர் அ.இ.ம.கா பக்கம் சார்ந்திருந்தால் அது அ.இ.ம.கா பொத்துவில் தொகுதி பூராகவும் உள் நுழைய வழி சமைத்திருக்கும்.எனவே,அதனைத் தடுக்க பைசால் காசீமை வேட்பாளராக களமிறங்கச் செய்வது பொருத்தமானது.

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் தருகிறோம் என்றால் அவரும் நம்பிவிடுவார். பைசால் காசீமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது விட்டால் அவரை ஏமாற்ற வேறு வழிகளுமில்லை. அ.இ.ம.கா அம்பாறையில் தங்களுக்கு பாரிய ஆதரவுள்ளதான ஊடக மாயையை ஏற்படுத்திருந்தது. இந்த மாயைக்குள் அம்பாறை மாவட்டத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர்களின் கைகளில் சிக்கிருந்தால் அது மு.கா செல்வாக்கை மக்களிடையே அதிகம் பாதித்திருக்கும். இந்த காய் வெட்டல் நேராக பார்க்கும் போது பிழையாக தோன்றினாலும் அந் நேரத்தில் கட்சியைப் பாதுகாக்க பெரிதும் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை.

மு.கா என்ற ஒரு சிறிய கட்சி ஒரு ஊரில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதானது அக் கட்சியின் வளர்ச்சிக்கு பொருத்தமானதல்ல என்ற விமர்சனம் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கின்றது. இவ் விமர்சனத்தை யாராலும் பிழையென மறுத்துரைக்க முடியாது. ஆனால், அதற்கு ஹசனலியையே புறக்கணிக்க வேண்டும் என்பதையே ஏற்க முடியாதுள்ளது.

பைசால் காசிமையும் புறக்கணிக்கலாம் அல்லவா? தேசியப்பட்டியல் அறிமுகம் செய்யப்பட்டதன் உண்மையான நோக்கம் சிறந்த அறிவாளிகளை பாராளுமன்றத்தினுள் உள் வாங்குவதற்காகும்.அந்த வகையில் சிந்தித்தால் இன்று தேசியப்பட்டியலைப் பகிர சிந்திக்கப்படுபவர்களில் ஹசனலி எல்லா வகையிலும் மிகவும் பொருத்தமானவர்.இந்த வகையில் நோக்கினால் மூன்றாம் தடவை நான்காம் தடவை என்ற கதைகளே எழாது.

மு.கா இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளைத் தொகுத்து ஐ.நா சபைக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்தது.இதனை செயலாளர் என்ற வகையில் ஹசனலி எதுவித சிறு தயக்கமுமின்றி ஐ.நா சபை அலுவலகத்திற்கு சென்று வழங்கிருந்தார். இவரின் இடத்தில் வேறு ஒரு செயலாளர் இருந்திருந்தால் இதனை வழங்கிருப்பாரா என்பது சந்தேகமே. மேலும், இவ் விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் ஹசனலி தனது சொந்த விருப்பத்தில் பேரில் இவ் அறிக்கையை சமர்ப்பித்ததான விம்பத்தையும் தோற்றுவித்திருந்தார்.

இவர் கோப் குழுவில் பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார்.இன்றும் கொள்கை ரீதியான அரசியலில் நிலைத்து நிற்கும் ஒரே அரசியல் வாதி.மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மகிந்தவை எதிர்த்து அறிக்கைவிட்டவர்களில் இவர் பிரதானமானவர்.இப்படியான சிறப்புக்கள் மிக்க ஒருவருக்கு மூன்று முறையல்ல முப்பது முறை தேசியப்பட்டியல் கொடுத்தாலும் பிழையாகாது.

தொடரும்......

குறிப்பு: இக் கட்டுரை திங்கள் கிழமை 02-05-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -