எம்.ரீ. ஹைதர் அலி-
குச்சவெளி பிரதேசத்திலுள்ள அந்நூரிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயம், குச்சவெளி இலந்தை குளம் வித்தியாலயம் மற்றும் குச்சவெளி அநூரிய்யா ஜூனியர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து 2016.03.21ஆந்திகதி (இன்று) காலை 07.30 மணியளவில் அந்நூரிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் கேல்வியுற்ற மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் உடனடியாக நேரில் சென்று பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வினவியபோது ஏற்கனவே இப்பாடசாலைகளுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 16 ஆசிரியர்கள் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டன.
அவ்வாக்குறுதிக்கமைவாக இன்னும் இப்பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. விஜேந்திரன் மற்றும் குச்சவெளி பிரதேசத்துக்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரி திரு. செல்வநாயகம் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் திரு. நிசாம் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் திரு மனோகரன் ஆகியோரோடு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரிடம் வலயக்கல்விப் பணிப்பாளர் குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் குச்சவெளி அந்நூரிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஐந்து ஆசிரியர்களும், குச்சவெளி இலந்தை குளம் வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்களும் மற்றும் குச்சவெளி அநூரிய்யா ஜூனியர் வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்களுமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மொத்தமாக ஒன்பது ஆசிரியர்களின் நியமனக் கடிதங்களின் பிரதிகளை மாகாண சபை உறுப்பினரிடம் கையளித்ததோடு, மிகுதியாக உள்ள ஏழு ஆசிரியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதிக்கு பிறகு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இந்நியமனங்களின் பிரதியினை பெற்றுக்கொண்ட மாகாண சபை உறுப்பினர் அந்தந்த பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களிடம் கையளித்தார். குறித்த இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.