தேசிய ஊதியக் கொள்கை ஒன்றை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விஷேட முகவர் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
23 பேரின் பெயர்கள் அந்த முகவர் நிறுவனத்திற்காக பிரேரிக்கப்பட்டுள்ளன.
அதன் தலைவராக கே.ஏ.எல். விஜேரட்ன நியமிக்கப்பட்டிருப்பதுடன், அசோக ஜயசேகர அதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களினதும் சம்பளம், ஊதியங்கள் மற்றும் பிற கொடுப்பனவு கட்டமைப்புக்களை மறு ஆய்வு செய்தல் உட்பட அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதியினால் மேலும் விடயங்களை மேற்கொள்வதற்கு குறித்த விஷேட முகவர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் முதல் 02 வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஆளனி விபர ஆணைக்குழுவாக அந்த விஷேட முகவர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஊதிய ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளது.
