முகம்மத் இக்பால், சாய்ந்தமருது-
இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பேராளர் மகாநாடு மூடிய அறைக்குள் நடைபெற்றுள்ளது. இது பலவித எதிர்பார்ப்புக்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் குருநாகலில் நடைபெற்றது. ஆனால் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு அரசியல் கட்சி ஒன்றின் பேராளர் மாநாட்டுக்கான சிறப்புக்களையும், களைகட்டல்களையும் கானமுடியவில்லை.
பேராளர் மகாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏட்டிக்கு போட்டியான அறிக்கைகளும், கண்டனங்களும் இடம்பெற்றது. இதன்மூலம் பனிப்போராக இருந்துவந்த உட்கட்சி பூசலானது தீப்போராக உருவெடுத்ததனை யாவரும் அறிவர்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட வை. எல்.எஸ் ஹமீத் அவர்கள், முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால போராளியாவார். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 1989 தொடக்கம் 1994 வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு செயலாளராகவும், மற்றும் 1994 தொடக்கம் 2000 ஆண்டு மரணிக்கும் வரைக்கும் அமைச்சராக இருந்த தலைவருக்கு இணைப்பாளராகவும் திரு வை. எல். எஸ் ஹமீத் அவர்கள் செயலாற்றினார்.
வை. எல். ஹமீத் அவர்களின் அரசியல் அனுபவத்துக்கும், அறிவிற்கும், அவரது வாதத்திரைமைக்கும் அமைச்சர் ரிசாத் அவர்களுடனும், அமீரலியுடனும் ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை கானலாம். முஸ்லிம் காங்கிரசுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு முன்பே மறைந்த தலைவருடன் ஒன்றாக செயற்பட்டதுடன் இலங்கை முஸ்லிம்களின் பூகோள அரசியலை நன்கு அறிந்துவைத்துள்ள இவர், பாராளுமன்ற கதிரைக்கு வாதப்பிரதிவாதங்களை நடாத்த மிகவும் பொருத்தமானவர்.
2004 ஆண்டு வை. எல். எஸ் ஹமீத், ரிசாத் பதியுதீன், அமீரலி போன்றவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியாக செயற்பட்டார்கள். பின்பு மகிந்த ராஜபக்சவை திருப்தி படுத்துவதற்காக முஸ்லிம் என்ற சொல் பதத்தை நீக்கிவிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசாக செயற்பட்டார்கள்.
இத்தனைக்கும் இந்த கட்சியை அமைப்பது தொடக்கம் அதன் யாப்புக்கள் வரைவது வரைக்கும் அதன் மூளையாக வை. எல். ஸ். ஹமீத் செயற்பட்டார் என்பது யாவரும் அறிந்தவிடயமாகும்.
கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்பு ஐ. தே. கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை நியமிப்பதில் இழுபறி நடந்தது. ஆனால் இந்தப்பதவிக்கு முழுத்தகுதியையும் கொண்டுள்ள ஹமீத் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ரிசாதுடன் இணைந்துகொண்ட புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த நபவி அவர்களுக்கு எம்பி பதவி வளங்கப்பட்டதானது, தான் ஏறுவதற்கு உதவியாக இருந்த ஏணியை மீண்டும் ஒத்திவிட்ட துரோகமாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.
ஹமீதுடன் ஒப்பிடுகையில் பாராளுமன்ற கதிரையை அலங்கரிக்கும் எந்த தகுதியும் நபவி அவர்களிடம் காணப்படவில்லை. தன்னைவிட திறமயானவருக்கு எம்பி பதவியை வழங்கினால் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற உள்ளச்சத்தின் காரணமாக ஹமீத் புறக்கனிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அப்பதவியினை நபவி அவர்களினால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் அரசியல் மட்டத்தில் காணப்பட்டது.
இந்த நிலையிலேயே உட்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்ததுடன் தனக்குத்தான் கட்சியின் முழு அதிகாரமும் இருக்கின்றது என்று கட்சியின் தலைவர் ரிசாத் அவர்களும், செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களும் ஏட்டிக்கு போட்டியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். இறுதியில் விடயம் தேர்தல் ஆனயாளரிடம் சென்றது. இருவரையும் அழைத்து விசாரித்த தேர்தல் ஆணையாளர், கட்சியின் யாப்புக்கள் தெரியாத தலைவரா என்று ரிசாத் பதியுதீன் அவர்களை நக்கலடித்தார்.
இறுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முழு அதிகாரமும் யாப்புரீதியாக அதன் செயலாளரிடமே உள்ளது என்று தெளிவான முறையில் தேர்தல் ஆணையாளரினால் கூறப்பட்டிருந்தது.
செயலாளருக்கு கட்சியின் முழு அதிகாரமும் இருக்கின்ற நிலையில் அவரது அனுமதி இல்லாமலேயே பேராளர் மகாநாடு நடைபெறுவதுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டிருந்ததானது சட்டப்படி குற்றமே, அப்படியிருந்தும் செயலாளர் ஹமீத் அவர்கள் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை? அவர் நினைத்திருந்தால் மாநாடு நடைபெருவதுக்கு முன்பாகவே நீதிமன்றம் சென்று மாநாடு நடாத்துவதனை தடுக்கும்வகையில் நீதிமன்ற இடைக்கால தடையாணையை பெற்றிருக்கலாம். ஆனால் அப்படியொரு முயற்சிகள் செயலாளரினால் எடுக்கப்படாதது ஏன்?
முன்கூட்டி நீதிமன்ற தடையாணை பெறுவதுக்கும், மாநாடு முடிந்தபின்பு வழக்கு தாக்கல் செய்வதுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது என்பது சட்டத்தரணியான ஹமீதுக்கு தெரியாமல் போனது ஏன்? வெறும் ஊடக அறிக்கைகளையும், கண்டனங்ககளையும் விடுக்கத்தெரிந்தவர்கள் நடைமுறை சாத்தியமான விடயங்களை எடுக்காததன்மூலம் ஹமீத் அவர்கள் அச்சுறுத்தப்பட்டாரா? அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா? என்ற சந்தேகங்கள் வலுவடைந்துகொண்டு செல்கின்றது.
இதற்கிடையில் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்பட்டதன் மூலம் வீசி இஸ்மாயில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. வீசி இஸ்மாயிலின் தகுதிக்கு இந்த பிரதி தவிசாளர் பதவி என்பது ஒரு பதவியேயல்ல. இது வெறும் கண்துடைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. வீசி இஸ்மாயிலின் தகுதிக்கும், திறமைக்கும் குறைவானவர்களுக்கு அவரைவிட உயர்பதவிகள் வளங்கப்பட்டதானது எதிர்காலத்தில் ஹமீதைப்போல வீசி இஸ்மாயிலும் ஓரங்கட்டப்படுவதுக்குரிய சாத்திய கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த தேர்தலில் வீசி இஸ்மாயில் அவர்கள் மக்கள் காங்கிரசில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டதன் மூலம் இக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் பேசப்படுவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் காரணமாக இருந்தார். காலப்போக்கில் தலைமைக்கு அச்சுறுத்தலாக வீசி இஸ்மாயில் வளர்ந்துவிடுவார் என்ற உள்ளச்சமே இந்த பிரதி தவிசாளர் பதவியாகும்.
எனவே மாநாடு நடைபெருவதுக்கு முன்பு இடைக்கால தடையாணை செயலாளரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்டு மாநாடு தடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு புஸ்வானமாகிப்போயுள்ளதடன் இதன் மறைவுக்குள் வீசி இஸ்மாயில் மறைமுகமாக ஓரம்கட்டப்பட்டுள்ளார் என்பதுவே உண்மையாகும்.
