கல்முனை பிரதேச சபையின் முதல் தவிசாளரும்.பொறியியலாளருமான மருதமுனைனையைச் சேர்ந்த ஐ.ஏ.ஹமீட் (வயது 71) நேற்று காலை (03-01-2016) மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார் இவர் சில காலம் நோயுற்றிருந்தார்.
இவர் 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி,அல்ஹம்றா வித்தியாலயம்,வீரத்திடல் அல்ஹிதாயா மகாவித்தியாலயம், வந்தாரமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும்,மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் கற்றார்.
உயர் கல்வியை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும்,நாவல இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் கற்று சமூக விஞ்ஞான பட்டதாரியாக பட்டம் பெற்று வெளியேறினார்.இலங்கை தொலைத் தொடர்பு சபையில் கடமையாற்றி பின்னர் அபுதாபியிலும் கடமையாற்றினார்
1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு கல்முனைப் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று கல்முனை பிரதேச சபையின் முதலாவது தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்;.எம்.அஷ்ரப் அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு அமைச்சர் அதாஉள்ளாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.அப்போது புணர்வாழ்வு அதிகார சபையின் தலைவராகவும்,உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
சமூக சேவையிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை 4.30 மணிக்கு மருதமுனை மையவாடியில் நடைபெற்றது.






