அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காம பிரதேச கொள்கைபரப்புச் செயலாளர் கே.எல்.சமீம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைநது கொண்டதன் பின்னர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது அம்பாரை மாவட்டத்தில் அதன் தோகைகளை அகல விரித்துக்கொண்டபோது இக்கட்சியானது இம்மக்களின் தாகங்களை தீர்க்கும் என்ற எண்ணத்தோடு அதன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவனாக மட்டுமன்றி இக்கிராமத்தில் கட்சிக்கான கொள்கைபரப்புச் செயலாளராகவும் பணியாற்றிய நான் இக்கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் கிழக்குமாகாண குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்களை ஒரு பொருட்டாக கருதாமல் கட்சி செயற்படுவதனையும் அவதானித்து, தான் இக் கட்சியை விட்டு விலகி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்;
நல்லாட்சிக்கு பங்களித்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் அவர்களின் பிரதித் தவிசாளர் பதவியை தக்கவைக்க முடியாத தலைமை மட்டுமல்லாது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாறுக் போன்றோர் கட்சியை விட்டு விலகாமல் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலமை காணப்பட்டது, மட்டுமன்றி கட்சியின் செயலாளர் நாயகத்தினை ஓரம் கட்டியமை போன்றவற்றினை எல்லாம் பார்க்கும் போது இக்கட்சியானது கிழக்கு மாகாண மக்களை கவனத்தில் கொள்ளாமல் பயணிப்பதனை காணமுடிகின்றது.
மேலும் இம்மக்கள் இக்கட்சிக்கு 33ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்து இக்கட்சியை இம்மாவட்டத்தில் மேலோங்கச்செய்த போதும் அதற்கான எந்தப்பலனையும் இம்மக்கள் அனுபவிக்கவில்லை என்றே கூறவேண்டும். அதுமாத்திரமன்றி வாக்களித்த தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் பல காரணங்கள் கூறப்பட்டு பிரிதொரு பிரதேசத்திற்கு கைமாறப்பட்டதும் ஏமாற்றமேயன்றி வேறில்லை.
இம் மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளை பெற காரணமாய் இருந்து கட்சிக்காய் அரும் பணியாற்றிய முன்னாள் மேயர் சிறாஸ் மீராசாஹிப் இக்கட்சியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ச்சியாக இக்கட்சிக்குள் இருந்துகொண்டு அங்கீகரிக்க முடியாது. கடந்த ஆட்சியில் சுகபோகங்களை அனுபவித்த தனிநபர்களை மீண்டும் இக்கட்சி திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வாக்களிக்வில்லை என்பதனை தலைமை புரியாமல் இருப்பது கவலையான விடயம்.
நல்லாட்சிக்கு பங்களித்த அ.இ.ம.காங்கிரஸ் கட்சி சாதித்த விடயம் தான் என்ன? தங்களுக்கான அமைச்சுப்பதவிகளை பெறுவதில் காட்டுகின்ற ஆர்வம் மக்கள் பணிகளில் ஏன் காட்டமுடியாமலுள்ளது. தேர்தல் காலங்களில் கூறிய கரையோர மாவட்டம் பெறாமல் அமைச்சுப்பதவிகளை பெறுவதில்லை என்ற வாக்குறுதி தேர்தல் கால காற்றோடு கலந்து கரைந்துவிட்டது என்றே கூறவேண்டும்.
அண்மையில் இறக்காம பிரதேச மக்கள் அமைச்சரை சந்தித்து இம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சம்பளமோ, வாகனமோ அற்ற ஒரு இணைப்பாளர் பதவி கேட்டும் அதனைக்கூட தறமறுத்த தலைமையின் பின்னால் செல்வதற்கு இனியும் இம்மக்கள் தயாரில்லை என்பதனை கூறிக்கொள்வதோடு, இவ்வாறான செயற்பாடுகள் இங்குள்ள மக்களையும், அமைப்பாளர்களையும் சோர்வடையச்செய்துமுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும் இக்கட்சிக்குப்பின்னால் பயணிப்பதனை விலக்கிக்கொள்வதோடு முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் பலப்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளேன். அதற்காக எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இறக்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜபீர் மௌலவி மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.
