இந்தியாவில் உள்ள விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் கண்கள் சற்று விரிந்ததும் உடன் எழுதிய கவிதை இது.
சு.ம.அமுதாவால் தட்டச்சு செய்யப்பட்டது.
மஜீத் கவிதை...
என்னால் தீயிட்டு தகனம்
செய்த ஒன்பது நாட்குறிப்பேடுகளின்
இரண்டாவது நினைவுதினம் இன்று
(9/1/2016)
இறைவா!!
என் இருதயத்தை இலங்கச்செய்
என் நாவில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்துவிடு
பிறர் விளங்கும்படி என் வார்த்தை
தெளிவைக்கொடு எனும் வேதாந்த
வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறேன்.
எனது தலைமாட்டில் வாடிய முகத்துடன்
அழுதுகொண்டு யாசின் சூராவை ஓதி காதுகளில்
ஊதிக்கொண்டிருக்கும் என் அன்பு மனைவி சாபிரா
திக்குத்தெரியாது என்னையே பார்த்துக்கொண்டிருக்கும்
எனது அன்பு மகள் சமிலா குட்டிக்கும்
எனது இறுதிப்பயணம்பற்றி
நான் என்ன சொல்ல
வார்த்தைகள் வருகிறது
பதிலாக கண்ணீரே பதிலுமாகிறது.
இனி என் மூச்சுகளில் மிதந்துவரும்
நறுமணங்களை எப்படி உங்களிடம் கூற
சுற்றிலும் மிக அழகிய பெண்கள்
அவர்கள் அனேகமாக வானதேவதைகளான
“கூர்லீன்”களாகவே இருக்கவேண்டும்
“அல்ஹம்துலில்லா”
அதைச் சுற்றிலும்
ஓர் அழகிய பறவைபோல் புலப்படுகிறது
நீண்ட இறக்கைகளோடு வட்டமிட்டபடி
என்னையே சுற்றி வருகிறது.
ஆம் புரிந்துவிட்டது
“வானவர்” மலக்கல் மவுத் வந்துவிட்டார்
நான் எனது மனைவியின் முகத்தைப் பார்க்கிறேன்.
கண்கள் கலங்கிவிட்டது.
அன்புக்கும் பாசத்துக்குமான அன்பு மகளையும் பார்க்கிறேன்
இவர்களிடம் நான் என்ன சொல்வது
அவர்களால் தாங்கவும் முடியாது
என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்
“மலக்கல்மவுத்” மிக அதிகமாக சிறகைவிரித்தும் விட்டார்
எனது மூடிய பார்வை மிக அதிகமாக விரிந்தும்விட்டன
அருகில் அமர்ந்திருந்த மனைவியும் மகளும்
மூச்சுவிடும் சத்தத்தை இமைவெட்டாது
பார்த்துக் கொண்டும் அழுதுவடித்து “குர்ஆனை”
மூடியும் விட்டனர்.
சுற்றியிருந்த உறவினர்கள், குடும்பத்தினர்கள்,
தோழர்கள், அழகிய நான் இதுவரையில்
கண்டிடாத தேவதைகள் “ஸலாம்” சொல்லி
விடைபெற்றனர்.
நான் சற்று மனைவியுடன் பேச ஆசைப்பட்டேன்
அது அவளுக்குப் புரிந்துவிட்டது
நெருங்கி காதோடு எனது வாய் வைத்துக்கேட்கலானாள்
முதலில் சலாம் கூறி ஆரம்பித்தேன்.
என்னை அவசரமாக “மலக்கல் மவுத்” நெருங்கியும் விட்டார்
அதிகம் பேச அவகாசமில்லை
எனது அன்பு மகள் கவனம் என்னைவிட
நீயே அவளுக்கு ஆறுதல் கூறுவாய்
நீ பயப்படத் தேவையில்லை
எல்லோருக்கும் இது நடந்தே ஆகும்
நீ எனக்காக “இத்தா” இருக்கத்தேவையில்லை
எனக்காக வெள்ளை
உடுக்கத் தேவையில்லை
மகளை நல்ல முறையில் கவனித்துக்கொள்
எனக்காக பிரார்த்தி அதுவே போதுமானது
உனக்கும் மகளுக்கும் இறைவனிடம் நல்ல இடம் உண்டு.
மிக மனவலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்
என்னை அடிக்கழுவத் தேவையில்லை
குளிப்பாட்ட தேவையில்லை
கபனிடத் தேவையில்லை
அடிக்கடி நீயும் மகளும் “யாஸின்” துவாவை
ஓதிக்கொள்ளுங்கள்
எனது உயிரற்ற ஜடத்தை “கபுறுக்குள்”
அடக்கம் செய்யத் தேவையுமில்லை
ஆனால் எனது தோழர்களும் உறவினர்களும்
இறைவனை வேண்டி தொழுதுகொள்ளுங்கள்
என் உயிர் உச்சந்தலையிலிருந்து
பெருவிரல் வழியாக “வானவர்”
பிரித்து எடுத்துச் செல்லக் காத்திருக்கிறார்.
அவருக்கு இறைக்கட்டளை இன்னும் கிடைக்கவில்லை
என்னை படுத்த பாயுடன்
ஒரு தனியான இடத்தில் வைத்துவிடுங்கள்
“தேவதைகள்” சுமந்துசென்றுவிடுவர்
வழிவிடுங்கள்
முடியுமானால் நல்ல வாசனை திரவியங்களைப் பூசிவிடுங்கள்
முடியுமானால் மீண்டும் கூறிவிடுங்கள்
உறவினர் தோழர்கள் என்னை அடிக்கடி
நலன் விசாரித்து உதவிகள் செய்த
தோழர்களிடம் கடன் ஏதும்பட்டிருப்பின்
“ஹலால்” செய்துவிடும்படியும்
இறைவனிடம் எனக்காக “தூவா”
செய்துவிடும்படியும்
வேண்டிக்கொள்.
யாவற்றையும் படைத்து பரிபாலிக்கும்
இறைவன் போதுமானவன்
அவன் நினைத்தால் ஒருநிமிடம்போதும்
என்னைக் குணப்படுத்த
தொழுது கொள்ளுங்கள்
என் உயிர் சாபிராவே!!
என்னுடைய மகள்!!
உன்னுடைய துணை நிச்சயம்
நீ எனக்காகப்பட்ட அவமானங்கள்
உறவுகளால் ஏற்பட்ட புறக்கணிப்புகள்
என் உள்ளத்தை வதைக்கிறது.
உங்கள் இருவர்களையும் விட்டு
பிரிகிறது என்பது என்னில் புதைந்துவிட்டது
பயப்படாதே
நீஎனக்கு முன் சுவனம் செல்வாய்
என் இறுதி பிரார்த்தனைகளும்
இதுவாகவே இருக்கும்.
எல்லாவற்றுக்கும் எம்மைப் படைத்த
இறைவனே போதுமானவன்
எல்லாவற்றிக்கும் சாட்சியாளனும் அவனே.
இனி எனது இறுதி வார்த்தை
எனது மகளும் நீயும் நல்ல இறை அடிசேர வேண்டுகிறேன்
“மலக்கல்” மவுத்தும் கிட்டாகிவிட்டார்
போய் வருகிறேன்
ஓர் உண்மை சொல்லவேண்டும்
சென்றால் திரும்பி வரமுடியாத இடம் இது.
மீண்டும் மீண்டும் கூறுகிறேன் உங்களுக்காக
இவ்வுலகில் எதையும் விட்டுவைக்கவில்லை.
இறைவன் மட்டுமே உங்களில் கவனம் செலுத்துவான்
எனக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது
போய் பிரார்த்திருக்கிறேன்
“மலக்கல்மவுத்” இறைதூதர் காத்திருக்கிறார்
இறைத்தேவதைகள் ஸலவாத்து ஓதும்
சத்தம் கேட்கிறது.
போய் விடுகிறேன் நீயும் மகளும் அழவேண்டாம்.....
-மஜீத்
பொத்துவில் ஏ.மஜீத் குணம்பெற பிரார்த்திப்போம்.
பிரசுரித்தவர்.
பீர் முகமது
பதினேழு வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர்.
“எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம்.
’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்;
’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர்.
