சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண மூவின மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் அமைய வேண்டும். எவ்வளவுதான் அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொண்டாலும் கிழக்கில் வாழும் மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் நாம் செயல்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித் தவிசாளர் திரு பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையின் சமமான அபிவிருத்தி 2014ம் வருடதிட்டத்தில் நிதியொதுக்கப்பட்டு பால் சேகரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்காக இறக்காம பிரதேசத்தில் வாங்காமம், இளுக்குச்சேனை, நியூகுண ஆகிய கிராமங்களில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை இக் கிராமங்களில் வாழும் ஏழை முஸ்லிம், சிங்கள மக்கள் 400 பேருக்கு கால் நடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒரு சில பயனாளிகளுக்கு கால் நடைகள் வழங்கப்பட்ட நிலையில் முதலமைச்சரினால் இத் திட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு வேறு கிராமங்களுக்கு நிதி மாற்றப்பட்டது.
இந்த விடயம் குறித்து சபை அமர்வில் தனிநபர் பிரேரணை சமர்ப்பித்து கிழக்கு மாகாண சபையின் விசேட கவனத்திற்கு கொண்டு வந்தேன். அப்போது முதலமைச்சர் இச்சபையில் வாங்காமம், நியூகுண கிராமங்களுக்கான நிதி மாற்றப்பட்டதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும் இக் கிராமங்களுக்கான நிதி சமமான அபிவிருத்தி திட்டத்தில் 2016ம் ஆண்டிற்கான நிதியொதுக்கீட்டில் வழங்கப்படுமென இச் சபையில் தெரிவித்தார்.
இன்று சபையில் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு– செலவு திட்டத்தில் 2016ம் ஆண்டிற்கான சமமான அபிவிருத்தித் திட்டத்தில் தொடர் வேலைக்காக கிண்ணியா ,ஏறாவூர், வீரமுனை ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொடர் வேலைகளுக்கு நிதியொதுக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இவ் வருட நிதியொதுக்கீட்டிலும் வாங்காமம், நியூகுண ஆகிய கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாழும் வாங்காமக் கிராமமும், சிங்களவர்கள் வாழும் நியூகுண கிராம மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண சபையின் தவறான செயற்பாடுகளினால் நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறானஏழைக் கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் மனங்களைக் கூட கணக்கிலெடுக்காமல் அரசியல் பழிவாங்கல்கள் நடவடிக்கைகள் கிழக்கு மாகாண சபையில் தொடர்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பெறவும், இன பிரச்சினை தீர்வு விடயத்திலும் கிழக்குமாகாண சபை தீவிர கவனம் செலுத்தவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதிகாரங்களை பெறுவதற்கு தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தவேண்டும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் உங்களிடம் உள்ளது. அதேபோன்று மத்திய அரசின் அதிகாரமும் இதற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் தடைகள் ஏதும் உங்களுக்கு இல்லை.
நாங்கள் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த போது பிரதேச சபை திருத்தசட்ட மூலம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நமது சிறுபான்;மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் இத்திட்டத்தினை தைரியமாக எதிர்த்து திருப்பியனுப்பிய வரலாறு எங்களுக்கு இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது முதலமைச்சராக திரு. சந்திரகாந்தன் வருவதற்கு நாங்கள் எங்கள் பங்களிப்பை வழங்கினோம். அன்றைய நிலைமையில் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவேண்டுமென்ற கோரிக்கை எமது சமூகத்திடம் இருக்கத்தக்கதாக நீண்டகாலமாக போர் நடந்த கிழக்கு மாகாணத்தில் இன உறவுகள் அழிக்கப்பட்டிருந்த சூழ் நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஒரு தமிழரை நியமித்து இன உறவை வளர்த்ததுடன் கிழக்கு மாகாணத்தில் வரலாற்று அபிவிருத்தி பணிகளையும் புரிந்தோம்.
2012இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் பின் கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு முதலமைச்சர்களின் பதவிக் காலத்திலும் அமைச்சராக பணி புரிந்து கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமைக்காகவும் வரலாற்று அபிவிருத்திக்காகவும் பணிபுரிந்தேன். 2015 இல் கிழக்கு மாகாண சபையில் மூன்றாவது முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அவர்கள் வருவதற்கு ஆதரவு வழங்கிவிட்டு எதிர்கட்சி உறுப்பினராகவும் செயல்பட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அரசியலில் வெற்றி பெறுவர்கள் தோல்வியடைவார்கள், தோல்வியடைந்தவர்கள் வெற்றி பெறும் நிலைதான் நமதுநாட்டின் அரசியல் வரலாறு என்பதனை நாம் கண்டு கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
