முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது
தேர்தல் ஒன்று நெருங்குகின்ற போதெல்லாம் வில்பத்து தேசிய சரணாலயம் சம்பந்தமான பேச்சுக்களும், போராட்டங்களும் ஊடகத்தினை ஆதிக்கம் செலுத்துவதும், பின்பு கிடப்பில் போடப்படுவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.
அதிகமான மிருகங்கள் வாழுகின்ற ஒரு தேசிய சரணாலயமாக காணப்படுவதுடன், இது புத்தளம், அனுராதபுரம் ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக, அனுராதபுரம் நகரிலிருந்து மேற்கு பக்கமாக 30km தூரத்திலும், புத்தளம் நகரிலிருந்து வடக்கு நோக்கி 26km தூரத்திலும் ஒரு தேசிய சரணாலயமாக இந்த வில்பத்து காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தினதும், புத்தளம் மாவட்டத்தினது எல்லையாக ”உப்பாறு” காணப்படுவதுடன், வில்பத்து தேசிய சரணாலயத்தின் ஒரு இஞ்சி நிலமேனும் மன்னார் மாவட்டத்தினுள் அதாவது வடமாகானத்தினுள் உள்ளடங்கப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தின் முகவெத்திலையாக முசலி பிதேச சபைக்குட்பட்ட மரிசிக்கட்டி எனும் கிராமம் காணப்படுகின்றது. இருபத்தெட்டு கிராமங்களை உள்ளடக்கிய முசலி பிரதேச சபையின் ஐந்து கிராமங்களே குறிப்பிட்ட பிரச்சினைக்குரியதாகும். அதில் முள்ளிக்குளம் கிறிஸ்தவர்களை கொண்டதாகவும், ஏனைய மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி எனும் நான்கு கிராமங்களும் முஸ்லிம் மக்களுக்குரிய கிராமங்களாகும்.
விடுதலைப் புலிகளினால் வெளியேற்றபடுவதற்கு முன்பு குறிப்பிட்ட கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஓலை குடிசைகளிலும், களிமண், மற்றும் சாதாரண கல்வீடுகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஒருசில அரச கட்டடங்களையும், பள்ளிவாசல்களையும், கடப்படையினர் தங்கியிருக்கும் அபூசாலி ஹாஜியாரின் இல்லத்தினையும் தவிர, வேறு அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு பெரிய நிலையான கட்டடங்கள் அங்கு இருக்கவில்லை.
1990 ஆம் ஆண்டு இம்மக்கள் விரட்டப்பட்டதற்கு பின்பு அப்பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த வீட்டு உபகரணங்கள் சூறையாடப்பட்டதன் பின்பு, அப்பிரதேசத்தில் பெறுமதி மிக்க மரங்கள் விடுதலைப் புலிகளினால் நடப்பட்டிருந்தது. அத்துடன் இயற்கையாகவும் மரங்கள் முளைத்ததனால் அப்பிரதேசம் அடர்ந்த காடுகளாக காட்சி தந்தது.
2009 இல் யுத்தம் முடிவடைந்தாலும் குறித்த இப்பிரதேசங்கள் 2008 ஆரம்பத்தேலேயே விடுதலை புலிகளிடம் இருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தது. பின்பு இப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் நடப்பட்டிருந்த பெறுமதிமிக்க மரங்களெல்லாம் வியாபார நோக்கங்களுக்காக வெட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மரங்கள் வெட்டப்படுவது ஒரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக காணப்பட்டதனால், இதனை கட்டுப்படுத்தும்பொருட்டு முசலி பிரதேச சபைக்கு உட்பட்டதும், வில்பத்து தேசிய சரனாலயத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மரிச்சிக்கட்டி, பாலைக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்கள் வில்பத்து தேசிய சரனாலயங்களுக்கு சொந்தமானது என்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த இரு கிராமங்களையும் தவிர ஏனைய கரடிக்குளி, கொண்டச்சி ஆகிய கிராமங்களிலாவது முஸ்லிம் மக்களை குடியமர்த்தியிருக்கலாம். மொத்தத்தில் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் முப்பது சதவீததில்கூட முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்படவில்லை.
இதன் மூலம் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்தும் தனது சொந்த மக்களை மீள்குடியேற்றாத அமைச்சர் என்ற உலக சாதனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் நிலைநாட்டியுள்ளார்.
இங்கே கேள்வி என்னவென்றால் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இப்பிரதேசத்தில் அதியுயர் அரசியல் அதிகாரம்மின்றி தனி நபர்களினால் இவ்வாறு பெறுமதிமிக்க ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியுமா ? அப்படியென்றால் மன்னார் மாவட்டத்தில் அதியுயர் அரசியல் அதிகாரம் படைத்தவர் யார்?
அத்துடன் கடந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சராகவும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராகவும், வடக்கின் வசந்தத்தில் பசில் ராஜபக்சவின் பங்காளியாகவும் அதி உச்ச அரசியல் அதிகாரத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் காணப்பட்டார்.
அப்படியிருந்தும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு தெரியாமல் குறித்த முஸ்லிம் பிரதேசங்களை வில்பத்துவுடன் இணைத்து அரச வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்த முடியுமா ? இப்பிரகடனம் செய்யும்போது அமைச்சர் எங்கே இருந்தார்? வர்த்தமானி அறிவித்தலுக்கு பின்பாவது இதனை அவர் அறிந்திருக்கவில்லையா?
எதிர்காலத்தில் இப்பிரச்சினையை திட்டமிட்டு தனது சுயநல அரசியல் முன்னெடுப்புக்காக பயன்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே அறியாதவர் போன்று அமைச்சர் இருந்தாரா? போன்ற கேள்விகளை கண்ணை மூடிக்கொண்டு ரிசாத் செய்வதெல்லாம் சரி என்று வாதிடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
மகிந்த அரசின் செல்லப்பிள்ளையாக ரிசாத் பதியுதீனும், வளர்ப்பு நாயாக பொதுபல சேனா போன்றவர்கள் இருந்தபோதுதான், வில்பத்து பிரச்சினையை பொதுபல சேனாவினர் ரிசாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பின்பு அமைச்சர் இல்லாத நேரம் பார்த்து அவரது காரியாலயத்துக்கே சென்றதாக ஒரு நாடகம் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
தனக்கு எதிராக இப்படியான ஒரு அரசியல் போராட்டத்தினை மேற்கோளும் பொருட்டு ரிசாத் பதியுதீனுக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான தொடர்புகளை வவுனியாவை சேர்ந்த பௌத்த குருவான சியம்பலகஸ்வேவா விமலசார தேரோ என்பவர் மேற்கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.
பொதுபல சேனாவுடன் உண்மையில் பிரச்சினை இருந்திரிந்தால் தனது எஜமானரான மகிந்த ராஜபக்ஸவின் மூலம் அதனை மூடிய அறைக்குள்ளேயே தீர்த்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் எதிரியுடன் களத்தில் நின்று போராடும் ஒரு வீரத்தளபதியாக ரிசாத் பதியுதீனை காண்பித்து, தனது தாளத்து ஆடக்கூடியவரை முஸ்லிம்களின் தலைவராக உருவாக்கவும், இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்களின் மனதிலிருந்து வேரோடு சாய்த்துவிடலாம் என்ற தேவையும் அன்று மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தது.
இதனை உண்மைப்படுத்தும் வகையில் அன்று நீதி மன்றத்துக்கு கல்லெறிந்தும், நீதிபதியை தொலைபேசி மூலமாக அச்சுறுத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இப்பிரச்சினை பூதாகரமானதுடன், இந்த பிரச்சினை சம்பந்தமாக நீதியமைச்சர் என்றவகையில் வாய்திறக்கவோ, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவோ கூடாது என்று அன்றைய ஜனாதிபதி மகிந்தவினால் கட்டுப்படுத்தப்பட்டார் நீதி அமைச்சர் ஹக்கீம். இதன் மூலம் மகிந்தவும், ரிசாதும் சேர்ந்து அரசியல் நாடகம் ஆடுகின்றார்கள் என்பதனை ஹகீம் புரிந்துகொண்டிருக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தின் குறித்த இரண்டு முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்களை வில்பத்து தேசிய சரணாலயத்துடன் அன்று இணைக்கப்பட்டதாலேயே அது வில்பத்து பிரதேசம் என்று இன்று உரிமை கொண்டாடப்படுகின்றது. இந்த இணைப்பை அன்று தடுத்திரிந்தால் முஸ்லிம் பிரதேசங்களை வில்பத்துக்குரிய பிரதேசமாக யாராலும் பேசமுடியாதிருந்திருக்கும்.
விடுதலை புலிகள் முஸ்லிம் மக்களை தாக்கியதனாலேயே அஷ்ரப் அரசியலில் வளர்ந்தார். அதுபோல சிங்கள பேரினவாதிகள் மூலமாக ரிசாத் பதியுதீன் தன்னை வளர்த்துக்கொள்ள துடிக்கின்றாரா?
எனவே உண்மைகளை கூறும்போது சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். சிலர் தூங்குவதுபோன்று நடிக்கின்றார்கள். அவர்களை எப்படித்தான் தட்டி எலுப்பினாலும் எழும்பமாட்டார்கள். காலங்கள் சென்றபின்புதான் எது உண்மை என்பது தெரியவரும். அதுவரைக்கும் காத்திருப்போம்.
