முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-
கடந்த பதிவின் தொடர்ச்சி..
![]() |
| முகம்மத் இக்பால் |
மகிந்தவின் முதலாவது பருவ ஆட்சியில் பௌத்த பேரினவாத இயக்கமான போதுபல சேனாவின் உருவாக்கமும், அறிமுகமும் காணப்பட்டது. இரண்டாவது பருவ ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கும், மார்க்கத்துக்கும் எதிரான தீவிர செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் மகிந்த மூன்றாவது தடவையாக ஆட்சிக்கு வந்தால் மியன்மார் போன்று இங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான அதிதீவிர செயற்பாடுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் காணப்பட்ட நிலையிலேயே, தனது மூன்றாவது பருவ ஆட்சிக்காக 2015 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியினை மகிந்த அறிவித்திருந்தார்.
எனவே ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரசை தன்னுடன் வைத்துக்கொண்டு அதனை அழிப்பதற்கு எவ்வாறு தந்திரமாக சூழ்ச்சி செய்தாரோ, அதேபாணியில் மகிந்தவை அழிப்பதற்கு அவருடன் இருந்துகொண்டே இறுதிவரைக்கும் செயற்பட்டார் ஹகீம்.
மகிந்தவின் மூன்றாவது பருவ ஆட்சிக்காக திகதி அறிவிக்கப்பட்டதும், ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரசின் அதியுயர் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தாங்கள் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவினை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊடக அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.
பொதுபல சேனாவை அரவணைத்து செயற்பட்டதன் காரணமாக இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மகிந்தவுக்கு எதிராக கொதித்தெழுந்திருந்த நிலையில் எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிரிசேனா அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டதும், முதன்முதலாக ரிசாத் பதியுதீனின் கட்சியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் எதிர்த்தரப்புடன் இணைந்துகொண்டார்.
துணிச்சலுடன் முதன்முதலில் மகிந்த பக்கம் இருந்த ஒருவரின் கட்சித்தாவலினால் முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாக ஒட்டுமொத்த வன்னி மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக ஹுனைஸ் பாரூக் காணப்பட்டார். ஹுனைஸ் பாரூக் பின்னால் முழு வன்னி மக்களும் படையெடுத்ததனர். இதனால் ஒரு பிரதேச சபை உருப்பினராககூட தன்னால் வரமுடியாது என்ற நிலையை உணர்ந்ததன் காரனமாக, தனது முன்னைய அறிவிப்பில் இருந்து விலகி வாக்குமாறியவராக தான் இன்னும் யாரையும் ஆதரிப்பதாக முடிவெடுக்கவில்லை என்று ரிசாத் பதியுதீனால் அறிக்கை விடப்பட்டது.
இந்த அறிக்கைக்கு பிற்பாடு ரிசாத் பதியுதீனுடன் மகிந்த ராஜபக்ச நடாத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, தான் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவினை ஆதரிக்கபோவதாக ரிசாத் பதியுதீன் உடன்பட்டதன் பயனாக, ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களை ராஜினாமா செய்விக்கப்பட்டு அவரது இடத்துக்கு ரிசாத் பதியுதீனின் சகாவான அமீர் அலிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஏனைய தனிப்பட்ட அதி நவீன திரைமறைவு சலுகைகளும் வழங்கப்பட்டது. இதன் பயனாக தாங்கள் மகிந்தவை தொடர்ந்து ஆதரிப்பது என்பதில் ரிசாத் பதியுதீன் அவர்கள் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில்தான் சக்தி டிவி யின் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளரான பாராளுமன்ற உறுப்பினரும், மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் நண்பருமான ஸ்ரீ ரங்கா அவர்களுடன் ரிசாத் பதியுதீனுக்கு அலறி மாளிகையில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டு பிரச்சினை உருவானது. இறுதியில் ரங்காவை தாக்கினார் ரிசாத். தனது நண்பரை தனது இல்லத்தில்வைத்து தாக்கியதனால் ஆத்திரமடைந்த நாமல் ராஜபக்ஸ அவர்கள், ரிசாத் பதியுதீனின் கண்ணத்தில் சாரமாரியாக அறைந்தார். இதனால் அவமானத்துடன் செய்வதறியாது ஆத்திரமடைந்த ரிசாத் பதியுதீன் அவர்கள் உடனடியாக மகிந்த அரசைவிட்டு வெளியேறியதுடன் மைத்திரி, ரணில் ஆகியோர்களின் பாதுகாப்பில் எதிர்த்தரப்பில் சேர்ந்துகொண்டார். இதுதான் உண்மையான வரலாறு. இதற்கு சாட்சியாக ரங்கா அவர்கள் மட்டுமல்ல, அமீர அலியும், வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களும் உள்ளனர்.
இப்போ கூறுங்கள்! இங்கே புரட்சி எங்கே இருக்கின்றது? சமூகம் எங்கே இருக்கின்றது? வீரம் எங்கே இருக்கின்றது? என்று. சில ஊடகங்கள் உண்மை நிலையை திரிபுபடுத்தி உண்மைக்குமாரான வரலாற்றினை திரிபுபடுத்த முற்படுகின்றனர். ரிசாத் பதியுதீன் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் மகிந்தவினை விட்டு வெளியேறினார் என்ற உண்மையை மறைத்து, அவர் எதோ சமூகத்துக்காகவே தனது உயிரை தியாகம் செய்து புரட்சி மூலம் வெளியேறியதாக உண்மைக்கு மாறான பொய்களை மக்கள் மத்தியில் அவரது ஏவல்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது. எது எப்படி இருப்பினும் உண்மை உணமைதான். பொய் பொய்தான்.
முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாத பொதுபல சேனா அமைப்பினர் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிர பிரச்சாரத்தினை தென்பகுதியில் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டு வந்தனர். முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவை விட்டு வெளியேராததன் காரணாமாக, முஸ்லிம் காங்கிரசை சீன்டிப்பார்க்காமல் இருக்கும்பொருட்டு தங்களது இனரீதியிலான துவேச விசமப்பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியாதவாறு பொதுபலசேனாவினர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பேனும்பொருட்டும், பொதுபல சேனாவினால் துவேச பிரச்சாரத்தினை தென்பகுதியில் மேற்கொண்டால் அது சிங்களவர்களின் பெரும்பாலான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்துவிடும் என்பதனாலும் அதனை தடுக்கும் பொருட்டும், விசம பிரச்சாரத்திணை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று கருதியும், முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவினை விட்டு வெளியேறுவதில் தாமதம் செலுத்தியது.
இந்த நிலையில் மகிந்த அரசில் இருந்து வெளியேறாது தொடர்ந்து இருந்துகொண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியல் காய்நகர்த்தல்களை ஹக்கீம் அவர்கள் மேற்கொண்டுவந்தார். ஹகீம் மகிந்தவினை விட்டு வெளியேறுவதில் தாமதம் செலுத்துமாறு சந்திரிக்கா அம்மையாரும் விரும்பினார். அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பொதுக்கூட்டதுக்காக எத்தனையோ அழைப்புகள் வேட்பாளர் மைத்திரிக்கு விடுக்கப்பட்டிருந்தும், ஏற்கனவே திட்டமிட்டப்படி ஹகீம் இன்றி எந்தவொரு கூட்டத்துக்கும் மைத்திரி செல்லவில்லை.
தலைவர் ஹக்கீம் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மகிந்தவுடன் இருந்தார்களே தவிர, முஸ்லிம் காங்கிரசின் அனைத்து இயந்திரங்களும் ஹக்கீமின் ஆசீர்வாதத்துடன் மைத்திரிபால சிரிசெனாவுக்கே இயங்கியது. தபால்மூல வாக்கு பதிவிலும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அனைவரும் மைத்திரிக்காக களத்தில் நின்று வேலை செய்தனர்.
இந்தநிலையில் தனது ராஜதந்திர ரீதியிலான அனைத்து அரசியல் சானாக்கியங்களும் நிறைவடைந்த நிலையில் மகிந்த ராஜபக்சவினை விட்டு வெளியேற முன்பே, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினால் கல்முனை கடற்கரைபள்ளி முன்றளில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்துவிட்டு மைத்திரிபாலவை அழைத்துக்கொண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் தலைவர் ஹக்கீம்.
இங்கே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ரிசாத் பதியுதீன் மகிந்தவினை விட்டு வெளியேறியபின்பு, ரிசாத் பதியுதீனால் கேட்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் தான் வழங்கியதாகவும், அவரது கோரிக்கைகளை நிறைவு செய்ததாகவும் ஆனால் அனைத்தையும் பெற்றுக்கொண்டதன் பின்பு அவர் துரோகம் செய்து என்னை விட்டு சென்றுவிட்டார் என்று கவலைப்பட மகிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மகிந்தவினை விட்டு வெளியேறியதும், ஹக்கீம் முஸ்லிம்களுக்காக நாட்டை பிரித்து கேட்டதாகவும், அவர் என்னிடம் “கிழக்கிஸ்தானை” கோரியிருந்தார். ஜனாதிபதி பதவி ஒன்றுக்காக என்னால் ஹக்கீமின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நான் மறுத்து விட்டேன். அதனால்தான் ஹக்கீம் என்னை விட்டு சென்றுள்ளார் என்று சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.
எனவே முஸ்லிம் காங்கிரசை தன்னுடன் வைத்துக்கொண்டு அதன் எதிரிகளான ரிசாத் பதியுதீன், அதாவுல்லா போன்றவர்களின் கோரிக்கைக்கமைய கட்சியை பிளவு படுத்தி முஸ்லிம் மக்களின் குரல் வளயை நசுக்க முற்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு அவரது பாணியிலேயே சென்று அவரது ஆட்சியை கவிழ்த்து மைத்ரி தலைமையிலான நல்லாட்சியை நிலைநாட்டிய பெரும் பங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமையே சாரும்.

