மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நல்லாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்தவர்களின் உண்மை வரலாறு மறைக்கப்பட்டு கற்பனைக்கெட்டிய வகையில் ஊடகங்கள் வாயிலாக பொய்ப்பிரச்சாரங்கள் உலாவருவதனை காணக்கூடியதாக உள்ளது.
அரசியலில் சிலர் ஊடகங்களை மட்டும் நம்பி பிழைப்பு நடத்துவார்கள். சிலர் திரைமறைவில் யதார்த்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். யதார்த்தமான நடவடிக்கைகளை செய்கின்றவர்கள் தங்களது திட்டம் கசிந்துவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே ஊகித்தவாறு ரகசியம் காப்பதில் கவனமாக இருப்பார்கள்.
அந்தவகைலேயே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்கும் பொருட்டு ஊடகங்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மிகவும் மதிநுட்பமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் காய்நகர்த்தல்கள் அமைந்திருந்தது.
சந்திரிக்காவின் அமைச்சரவையில் சக அமைச்சராக மகிந்த ராஜபக்ஸ இருந்ததனால் அவரது கொள்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் நன்கு அறிந்திருந்தார்.
எனவேதான் 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தராஜபக்சவை ஆதரிக்க முன்வரவில்லை. அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை தவிர ஏனைய முஸ்லிம் அமைப்புக்களும், அதாஉல்லாஹ், ரிசாத் பதியுதீன் போன்றவர்களும் போட்டி போட்டுக்கொண்டு மகிந்தவை ஆதரித்தார்கள்.
ஜனாதிபதி பதவியினை அடைந்தவுடன் இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தன்னுடனேயே இருக்கின்றார்கள் என்று உலகிற்கு காண்பிக்கவேண்டிய அரசியல் தேவை மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.
அதனால் முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடன் இருக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். இதனால் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தனது ஆட்சியில் முஸ்லிம் காங்கிரசை இணைத்துக்கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடன் இணையும் வரைக்கும் அதன் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டாரே தவிர, இணைந்தபின்பு நடைமுறை ரீதியாக எந்தக்கொரிக்கயையும் அமுல் படுத்துவதற்கு மகிந்த முன்வரவில்லை.
மாறாக முஸ்லிம் காங்கிரசை தன்னுடன் வைத்துக்கொண்டு கட்சியை பிளவுபடுத்தி, அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் சூழ்ச்சிகளிலேயே ஈடுபட்டார்.
மகிந்த அரசின் சூழ்ச்சிகளை புரிந்துகொண்ட தலைவர் ஹக்கீம், உடன்பாடு கானப்பட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகிந்த விரும்பினாலும் மகிந்தவின் செல்லப்பிள்ளைகளாக இருந்த அதாவுல்லாவும், ரிசாத் பதியுதீனும் அதற்கு தடையாக இருந்தனர். மகிந்தவின் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசை அழித்துவிட வேண்டும் என்பதிலேயே இவ்விருவரும் முழுக்கவனத்தையும் செலுத்தினர்.
மகிந்த அரசில் அமைச்சராக இருந்தும், சிறியளவிலான அபிவிருத்திகளையோ, இளைஞ்சர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையோ மற்றும் வேறு எதனையும் மக்களுக்கு செய்யமுடியாதவாறு நிதி ஒதுக்கீடுகள் இன்றி பெயருக்கு அமைச்சராக இருக்கவேண்டிய நிலைமை தலைவர் ஹக்கீமுக்கு ஏற்பட்டது.
ஆனால் ஏராளமான நிதிகள் அதாவுல்லாவுக்கும், ரிசாத் பதியுதீனுக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கை இல்லாமல் செய்துவிட்டு, தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக்கூடியவர்களான அதாவுல்லாவையும், ரிசாத் பதியுதீனையும் தலைவர்களாக உருவாக்குவது பேரினவாதிகளின் திட்டமாக காணப்பட்டது.
இந்த சூழ்சிகளை புரிந்துகொண்ட ஹக்கீம் அவர்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும்பொருட்டு மகிந்தவுக்கு காலக்கெடு விதித்தார். தொடர்ந்து மு.காங்கிரசை ஏமாற்ற முட்பட்டதனால் மகிந்த அரசைவிட்டு 2008 ஆம் ஆண்டு வெளியேறி அவ்வாண்டு நடைபெற்ற கிழக்கு மாகானசபை தேர்தலில் ஐ.தே கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார்.
2009 இல் யுத்தம் முடிவடைந்தகையோடு 2010 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியினை மகிந்த அறிவித்தார். அப்போது மகிந்தவை எதிர்த்து போட்டியிடும் தகுதி ரணிலுக்கு இல்லை என்ற நிலைமையை உணர்ந்ததனால் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பாக நிறுத்துவதற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரினை முதன்முதலாக தலைவர் ஹகீம் அவர்களே முன்மொழிந்தார்.
அத்துடன் மகிந்தவினை எதிர்த்து ஹகீம் அவர்கள் சூறாவளி பிரச்சாரத்தினை நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டார். அப்போது அதாஉல்லாஹ், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் மகிந்தவுக்கு கோயில் கட்டி கும்பிடும் காரியங்களில் மட்டும் ஈடுபடவில்லை. மாறாக மகிந்த புராணம் பாடிக்கொண்டே இருந்தார்கள்.
அந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றிருந்தாலும், அது தேர்தல் மோசடி என்றே அரசியல் அவதானிகள் பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து சூட்டோடு சூடாக பொதுத்தேர்தலுக்கான திகதியினை மகிந்த அறிவித்திருந்தார்.
விடுதலை புலிகள் இல்லாத நிலையில் மகிந்தவின் இரண்டாவது பருவ ஆட்சியில் அவரை தட்டி கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை. தான் நினைத்தவாறு ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டத்தை திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலம் மகிந்தவுக்கு தேவைப்பட்டது.
இதனால் மீண்டும் முஸ்லிம் காங்கிரசை அரசுடன் சேருமாறு அழைப்பு விடுத்தார். அரசுடன் ஓட்டிக்கொண்டு பெயருக்கு அமைச்சராக இருப்பதில் பயனில்லை என்றும், முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகள் முன்கூட்டியே நிறைவேற்றபட்டால் மட்டுமே அரசுடன் இணைய முடியுமென்று முஸ்லிம் காங்கிரசினால் அழுத்தமாக கூறப்பட்டது.
இதனால் முஸ்லிம் காங்கிரசை பிளபுபடுத்துவதற்கு ரிசாத் பதியுதீனின் ஒத்துழைப்போடு தனது அனைத்து அரச இயந்திரங்களையும் மகிந்த பயன்படுத்தினார்.
அந்தவகையில் ரிசாத் பதியுதீனின் திட்டத்துக்கமைய ஜனாதிபதி மகிந்த அவர்கள் எந்தவித பாதுகாப்பு உத்தியோகத்தர்களுமின்றி ரிசாத் பதியுதீனுடன் அவரது வாகனத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர், செயலாளர் ஆகியோர் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இல்லங்களுக்கும் தனித்தனியே அழைத்துச் சென்று ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் பிரதியமைச்சர் பதவியும், கோடிக்கணக்கான பணமும், மற்றும் இதர சலுகைகளும் வழங்குவதாக ஆசைவார்த்தை காட்டினார்.
ஜனாதிபதியொருவர் தனது இல்லத்துக்கு வந்து இப்படியொரு வாக்குறுதி அளிப்பார் என்று மு. கா பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
எனவே பெரும்பாலானவர்கள் சோரம்போய்விட்டனர். இந்த தகவல் தலைவர் ஹக்கீமின் காதுகளுக்கு எட்டியவுடன், வேறு வழியின்றி கட்சி பிளவடைவதனை தடுத்து அதனை பாதுகாக்கும் வகையில் விருப்பமின்றி மகிந்தவின் அரசுடன் சேரவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடம்பெறும்..................
