ஷெய்க் மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகள் அசமந்தம். எனது பிள்ளைகளுக்கு, சகோதரர்களுக்கு கைகொடுக்க யாருமே இல்லையா?
இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி மாணவர்கள் கண்கலங்கி முறையிடுகின்றார்கள்.
சான்றிதல்களின் மூலப்பிரதி ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனர், ஜாமியாஹ் நளீமியாஹ் மற்றும் ஓரிரு நிறுவனங்களின் சான்றிதல்கள் அறபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருந்த பொழுதும் அவற்றை முஸ்லிம் விவகாரத் திணைக்களம் அத்தாட்சிப்படுத்திய பின்னரும் அதனை வெளிவிவகார கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்த மறுக்கிறதாம்.
அரச திணைனைக்கலமொன்றின் முத்திரையை அல்லது அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரியின் கையொப்பத்தை உறுதிப்படுத்துவதே கொன்சுலர் பிரிவின் பிரதான கடமை.
கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்தியதன் பின்னரே அறபு நாட்டு தூதுவராலயங்கள் அவற்றை அத்தாட்சிப் படுத்துகின்றன, உள்நாட்டில் தொழில் வாய்ப்புகளின்றி அல்லலுறும் பட்டதாரிகளின் வயிற்றில் அடிக்கும் மட்டரகமான புதிய வரைமுறைகளை கொன்சுலர் பிரிவு கொண்டிருப்பது வேதனை தருகின்றது.
வெளி நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புக்கள் பெறும் மாணவர்களுக்கும் கொன்சுலர் பிரிவின் மேற்படி நடவடிக்கை பாரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தருகின்றது.
இந்த விடயத்தை முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகவே வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரல் வேண்டும், அறபுமதரஸாக்கள், உலமாக்கள் நலன் பேணும் ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புக்கள் இந்தவிடயம் குறித்து கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
அறபு மொழி சான்றிதல்களை, அதிகாரபூர்வமாக ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து கொண்டு சென்ற பொழுதும்,குறிப்பிட்ட மதரஸாவில் இருந்து ஆங்கிலத்திலும் சான்றிதழ் எடுத்துச் சென்ற பொழுதும் அத்தாட்சியாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் கடிதம் கொண்டு செல்லப் பட்ட பொழுதும் வெளிவிவகார திணைக்களம் பாரபட்சம் காட்டுகின்றது.
கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தேசிய ஷூரா சபையின் விஷேட கூட்டத்தில் மேற்படி விவகாரத்தை மிகவும் தெளிவாக அவர்களது கவனத்திற்கு முன்வைத்தோம், குழுநிலைக் கூட்டங்களில் பேசுவதாக சொன்னார்கள். இன்றுவரை அவர்கள் ஒருவரேனும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா இது தொடர்பான ஒரு கடிதத்தை எழுதியமை நினைவிருக்கின்றது. 18/12/2015 அன்று கட்டார் தேசிய தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சின் முஸ்லிம் மேலதிகாரி ஒருவர் என்னிடம் "ஊடகங்களில் குறித்த விவகாரம் தொடர்பான உங்கள் ஆக்கத்தை வாசித்தவுடன் அது தொடர்பாக உரிய அதிகாரியுடன் கதைத்து தீர்வு கண்டதாக தெரிவித்தார்.
ஆனால் இன்று 23/12/2015 கட்டார் தூதுவராலயத்திற்கு வருகை தந்த ஏறாவூரை சேர்ந்த ஷரீஆ பட்டதாரி ஒருவர் அழாக் குறையாக என்னிடம் முறையீடு செய்தார். உடனே அவரை ஒரு அமைச்சரிடம் அனுப்பி வைத்தேன்.
குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேறு எவ்வாறு எடுத்துச் செல்வது என்று புரியவில்லை.
முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்குமிடத்தில் இருந்து இப்பொழுதே ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரைத் தொடர்புகொள்ளவும்..!
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உடனடியாக உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனநம்புகின்றோம்.
குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும், இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.
எந்த மந்திரி தீர்வு பெற்றுத் தருகிறார் என்று இரண்டொரு நாளில் பதிவு வரும் இன்ஷா அல்லாஹ்.. இன்றேல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றில் பாதிக்கப் பட்ட ஒருசிலருடன் தாக்கல் செய்வதனை தவிர வேறு வழியில்லை.
