வடக்கு முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு கால்நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் பல இடங்களிலும் வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டுள்ளதை நீங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஊடாக பார்த்திருப்பீர்கள்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கொழும்பில் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கருத்தரங்கொன்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனால் ஒழுங்கு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளன.
குறித்த இரு கட்சிகளும் வடபுல முஸ்லிம்களனி; மீள்குடியேற்றத்தையே வலியுறுத்தியும் இருக்கின்றன. எனினும் இரு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுசேர்த்து வடக்கு முஸ்லிம்களின் மிள்குடியேற்றத்தை வலியுறுத்தும் ஒரு தேசியமட்டத்திலான எழுச்சி மாநாடொன்றை நடத்தியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இலங்கையில் இருக்கின்ற பிரதான இரு முஸ்லிம் கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள் தமது கட்சியின் வருடாந்த எழுச்சி விழாவை மிகவும் விமர்சியாகக் கொண்டாடி தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு நிலைமையை நாம் பார்த்திருக்கிறோம்.
அதுபோல இந்த வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தும் வகையில் மாபெரும் எழுச்சிப் மாநாடொன்றை நடத்தி அதில் வடபுல முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு பிரகடனத்தை செய்த அரசுக்கம், சர்வதேசத்திற்கும் சொல்லுகின்ற நல்லதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டார்கள் என்ற ஆதங்கம் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.
எனவே, தேர்தல் காலங்களில் மு.கா. தலைவரும்., அ.இ.ம.கா தலைவரும் ஒரே மேடையில் அமர முடியுமென்றால் ஏன் இந்த வடபுல முஸ்லிம்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமும், அமைச்சர் ரிசாத் பதியுதினும் ஒரே மேடையில் எழுச்சிப் விழாவை கொண்டாட முடியாது. இதுவும் ஒரு அரசியல்தந்திரோபாயம் என்றே பார்க்க வேண்டியுள்ளது.
மு.கா கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளதுடன், இரண்டு வருட காலத்திற்குள் வடபுல முஸ்லிம்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ரிசாத் பதியுதின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தும் பொறுப்பு சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. இதில் கட்சி, வேறுபாடுகள் களையப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட கருத்தரங்குள் அதில் கலந்துகொண்டு கருத்துக்கள் தெரிவித்த பிரமுகர்கள் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறையுடன் செயற்படவேண்டும். வெறுமனவே கூடிக்களைந்துபோன கூட்டமாக இருக்கக் கூடாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஆத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தரப்பினர் வடபுல முஸ்லிம்களின் விடயத்தில் எதிர்காலங்களில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
வடக்கு முஸ்லிம்களின் மிள்குடியேற்றத்தை வலியுறுத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவுகள், உரிமைகள் பற்றி தமிழ் தரப்பினர்கள்;, அரச பிரதிநிதிகள் , ஆகியோரினது பேச்சுக்கள் உண்;மையில் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, பருவகால உரைகளாக அமையக்கூடாது.
இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டள்ளதுடன், நாட்டில் மூவின மக்களும் நிம்மதியாக வாழும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டள்ளது. தமிழ் மக்கள் தமக்குத் தேவையான அல்லது முன்னாள் அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழ்ப்பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து அதனை கௌரவமாகப் பெற்றுக்கொடுக்கின்றனர்.
ஆனால், 25வருட துன்பியல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம்களின் மறுக்கப்படுகின்ற உரிமைகளைப் பற்றி பேசுவதற்கும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் எமது முஸ்லிம் எம்.பிக்கள் எந்தளவுக்கு முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகும்.
ஆத்துடன், இந்த நாட்டில் நீண்ட காலத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தெரிவுக்கு தமிழ்-முஸ்லிம் எம்.பிக்கள் ஏகமனுதாக தமது ஆதரவுகளை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் நாட்டிலுள்ள மூவின மக்களுக்கும் பொதுவானவர். பொதுவாகவே செயற்படவேண்டிய பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கிறது. ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு கண்டிப்பாக பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அவர்களது சொந்த மண்ணுக்கு அனுப்பும் வரை வடக்கிற்கு செல்லப் போவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் கூறி வடக்கிலிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியில் அவரது உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆக, அமரர் சிவசிதம்பரத்தைப் போல தற்போதைய தமிழ் தரப்பினர் இருக்காவிட்டாலும், தமது சொந்த மண்ணுக்க மீள்குடியேற வருகின்ற வடபுல முஸ்லிம்களை நிந்திக்கும் அளவுக்கு செயற்படவேண்டாம் என்பதே எமது அன்பான கோரிக்கையாகும்.
இதற்கிடையில், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அரசியல் கட்சிகளினால் நடத்தப்பட்ட கூட்டங்கள் மற்றும் ஊடக மாநாடு ஊடாக அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தங்கள் என்பன அதன் நோக்கத்தை அடைந்துகொள்ள வேண்டும். வெறுமனவே அவை கூடிக்களைந்த கூட்டங்களாக இருக்கக் கூடாது.
இதேவேளை, நாட்டில் காணிப்பிரச்சினை அதிகமாக காணப்படுவதாகவும் அதனை கையாள தேசிய காணி பாவனைக் கொள்கையொன்iறை உருவாக்க வேண்டும் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே, வடக்கில் முஸ்லிம்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட காணியொரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யும் போது காணி மற்றும் வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
ஏனெனில், அரபு நாடுகளுடன் இலங்கை நல்லுறவோடு செயற்படுகிறது. இப்படியிருக்கையில், இலங்கை முஸ்லிம்கள் அதிலும் வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் மனிதாபின மற்றும் பொறுப்புள்ள விதத்தில் செயற்படும் பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளது. அப்போதுதான் அரபு நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் போது மிகத் தைரியமாக நாம் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களை கௌரவப்படுத்தியிருக்கிறோம் என சொல்ல முடியும்.
முன்னைய அரசு அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டுள்ள போதிலும் இலங்கை முஸ்லிம்களின் விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கே துபமிட்டது.
அந்த அரசாங்கம் செய்த தவறுகளை நல்லாட்சி அரசாங்கமும் செய்து விடக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாகும். மஹிந்த அரசாங்கத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட பலருக்கு நியாயம் பெற்றுக்கொடுத்த இந்த நல்லாட்சி, வடபுல முஸ்லிம்களின் விடயத்திலும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் எ;னபதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விகரமசிங்க மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு வருடங்களும் சுலோகங்களை ஏந்திக்கொண்டு கவனயீர்ப்பில் ஈடுபடுகின்ற வடக்கு மற்றும் வடக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம் மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.