க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதி தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் 10000 ரூபா பெற்றுத் தருவதாக பொய்யான கருத்துக்களை தெரிவித்த அரசியல்வாதிகள் எமக்கு வேண்டாம்.
என தெரிவித்து 100 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 07.11.2015 அன்று பிற்பகல் ஒரு மணித்தியாலயம் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலையில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பணவுகளை உடனடியாக வழங்குமாறும் 1000ருபா சம்பள உயர்வையும் காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல் வாதிகள் பெற்று தரவேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யான வார்த்தைகளை இனிமேலும் நாங்கள் நம்பபோவதில்லை என தெரிவித்ததோடு சம்பள அதிகரிப்பினை பெற்றுகொடுக்காவிட்டால் நல்ல பாடம் புகட்டுவதாகவும் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினையும் உடனடியாக நிறுத்துவோம் என இவர்கள் தெரிவித்தனர்.
எனினும் 3500 ரூபா மேலதிகமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தோட்ட கம்பனிகளிடம் அரசாங்கம் தீபாவளி கொடுப்பனவு தொடர்பாக மேலதிக விபரங்களை கோரியுள்ளதாகவும் மேலும் 3500 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என நம்பப்படுகின்றது.




