சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் தோட்டக்கள் இல்லாத இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படாமல் சிறுபாண்மை மக்களின் அரசியல் தீர்வு, அதிகாரங்களை பெறும் (தோட்டக்களாக) இயங்கி அழுத்தங்களை பிரயோகித்து செயல்பட வேண்டிய காலம் உருவாகி உள்ளது. மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் மாகாண விவசாய அமைச்சருமான திருதுரைராச சிங்கம் அவர்களால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் தோட்டாக்கள் இல்லாத இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படாமல் சிறுபாண்மை மக்களின் அரசியல் தீர்வு அதிகாரங்களை பெறும் தோட்டாக்களாக இயங்கி செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் நிஹால் கலப்பதி தலைமையில் இன்று நடைபெற்ற போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையை கடந்த 2008 ஆம் ஆண்டு மக்கள் பிரதி நிதிகளாக நாம் பாரமெடுத்த போது எமக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் நாம் பாரமெடுத்தோம். கடந்த ஆறரை வருட காலமாக இச் சபை வளர்ச்சியடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளோம். இன்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், சந்திராபொடிமெனிக்கே, மெத்தானந்த டி சில்வா, அருணசிரிசேன ஆகியோர் நமது கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சூழ்நிலையில் நமது கிழக்கு மாகாண சபை வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் இன உறவுகளை தொடர்ந்து வளர்ப்பதற்காகவும், நமக்கான அதிகாரங்களை பெறுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
கிழக்கு மாகாண சபை தற்போது வளர்ந்த ஒரு சபையாகும். இச் சபையின் நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இன்று மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், புஸ்பகுமார (இனியபாரதி)ஆகியோர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறுவதாக குறிப்பிட்டு ஆளும் கட்சிக்கு சென்றுள்ளனர்.
நாங்கள் எல்லோரும் ஆளும் கட்சியிலிருந்து கிழக்குமாகாண முதலமைச்சர் எங்களை ஏமாற்றிய காரணத்தினால் தான் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளோம். நல்லாட்சி என்று கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணையுமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்கின்றார்.
உண்மையில் உள்ளத்தால் கிழக்கில் நல்லாட்சிக்காக அழைப்பு விடுக்கவில்லை. எனவே, உள்ளத்தில் நல்ல எண்ணத்துடன் அழைப்பு விடுக்கும் போது கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
