ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சில குக்கிராமங்களை செங்கலடி நகருடன் இணைக்கும் வீதிகளில் அமைந்துள்ள வடிகான்கள் கடந்த சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாதுள்ளன.
இதனால் மாரிமழை காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிது.
செங்கலடி, ரமேஷ்புரம் மற்றும் கணபதிப்பிள்ளை கிராமம் போன்ற பிரதேசங்களை செங்கலடி நகரத்துடன் இணைக்கும் பொதுச் சந்தை வீதி மற்றும் பிரதேச செயலக வீதி ஆகிய பாதைகளில் இந்த வடிகான்கள் அமைந்துள்ளன.
காலத்திற்குக் காலம் வரும் அரசியல் வாதிகள் இவ்வடிகாலமைப்புக்களைப் புனரமைத்துத் தருவதாகத் தெரிவிக்கின்றபோதிலும் கடந்த பல வருடகாலமாக இது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்துவருகிறது.
இப்பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது ஐந்நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
பிரபல பாடசாலை, பொதுச்சந்தை,தபாற்கந்தோர் போன்ற இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் இப்பாதையையே பயன்படுத்துகின்றனர்.
இந்த வடிகான்களின் கட்டுக்கள் வெடித்துள்ளதுடன் தற்போது தூர்ந்த நிலையில் இங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன.
அடுத்த மாதம் பருவமழை ஆரம்பித்துவிட்டால் நீர்வடிந்தோடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை. இதனால் குறிப்பிட்ட கிராமங்கள் வெள்ளத்தினால் சூழப்படுகின்றன. தேங்கும் வெள்ளநீ;ர் ஏழு அல்லது எட்டு மாதங்களின் பின்னரே வற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே செங்கலடி பிரதேச வடிகான்களை தோண்டி புனரமைத்து வெள்ளநீரை செங்கலடி கறுத்தப் பாலத்தில் சங்கமிக்கச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

