கரீம் ஏ.மிஸ்காத்-
மன்னார் அடம்பன் பிரதேச செயலாளரை இடமாற்றக் கோரி அடம்பன் பள்ளிவாசல் பிட்டி கிராமத்தில், அடம்பன் பிரதேசத்திற்கு உட்பட்ட பல கிராம மக்கள் ஒன்றினைந்து இன்று (11-09-2015) நன்பகல் 1:00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடம்பன் பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தகுமார்(அன்டன்) அவர்கள், மாந்தை பிரதேசத்தின் நெடுவரம்பு எனப்படும், அரச காணியை, தனக்கு தெரிந்தவர்கள், தேவையானவர்களுக்கு பிரித்து வழங்குகியுள்ளார், என குற்றஞ்சாட்டியே, இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
நெடுவரம்பு காணியானது 2010ம் ஆண்டில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய பிரபா மூர்த்தி அவர்களால் அப்போதே 250 குடும்பங்கள் வாழ்வதற்காக தற்காலிகமாக உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. நெடுவரம்பு காணியை பகிர்ந்தளிப்பதற்காக அக்காணியை அண்டி வாழ்கின்ற வட்டக்கண்டல், கட்டைக்காடு, மினுக்கன், ஆண்டாங்குளம், சாளம்பன், நெடுவரம்பு ஆகிய கிரமாங்களைச் சேர்ந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த அம்மக்கள் மீள்குடியேறி வாழ்வதற்காக வழங்கப்பட்ட அக்காணியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறினர்.
குடியேறிய அம்மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக சர்வோதயம் அமைப்பால் 30 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டிருந்ததாக, அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சில காலங்களில் வெள்ளப் பெருக்கு, கட்டுக்கரை குளம் உடைப்பெடுக்கும் அபாயம், காரணமாக அம்மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டதோடு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் வரை அம்மக்கள் அப்பிரதேசத்தில் இருந்து நகர்ந்திருந்தனர்.
இக்காரணத்தை சந்தர்ப்பமாகப் பயன் படுத்தியே குறித்த பிரதேச செயலாளர், தனி நபருக்கு அக்காணியை வழங்கியதாக, பாதிக்கப்பட்ட அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த பிரதேச செயலாளரை உடனடியாக இடம் மாற்றி இப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு, வன்னி மாவட்ட அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சரையும், மாகாண சபை உறுப்பினர்களையும், அரச அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட அம்மக்கள் வேண்டு கோள்விடுக்கின்றனர்.
மேலும் இவ் ஆர்பாட்டத்தின் பின், வடமாகாண மீன்பிடி கடற்றொழில் அமைச்சர் டெனிஸ்வரனிடம் வடமாகாண சபை மஜ்லிஸ் சூரா சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்ரப் முபாறக் அவர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தார்.


