ஏ.எல்.எம்.தாஹிர்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று(16) பம்பலப்பிட்டியிலுள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இங்கு உரையாற்றும் பொழுது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருப்பதானது ஒரு பெருமையான விடயமாக கருதுவாதாக குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கு பகுதிகளில் பார்க்கும் போது முக்கியமாக கிழக்கு மாகாணத்திலும் மன்னாரிலும் முஸ்லிம் மக்கள் அதிகளவாக இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளெல்லாம் தீர்ப்பதற்கு அவர்களுடைய ஒத்துழைப்புடன் தான் செய்ய வேண்டும் என்றுதான் நான் கருதுகின்றேன்.
அதற்கு ஏற்ற விதத்தில் கௌரவ ஜனாதிபதியும் கௌரவ பிரதமர் அவர்களும் என்னையும் கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் நியமித்து இருக்கின்றார்கள். நான் என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு கொடுத்து தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இன்றி சகலருக்கும் சமமான சலுகைகளைக் கொடுத்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவதில் உறுதியாய் இருக்கின்றேன்.
எனவே எல்லோரும் கடந்தகால கசப்பான நினைவுகளையெல்லாம் மறந்து தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த தாய்திரு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்பதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர் மேலும் உரையாற்றுகையில்இந்த அமைச்சைத் தந்து என்னை நியமித்த அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த அமைச்சைப் பொறுத்தவரையில் இது முக்கியமான அமைச்சாகும். குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பல இலட்சக் கணக்கான மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் இன்னும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிவர்த்திக்கப்படாத ஒரு நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே கூட எனக்குத் தெரியும் மீள்குடியேற்றப்பட்ட பல கிராமங்களில் இன்னும் அவர்களுடைய தேவைகளான வீட்டுவசதிகளோ, தொழில் வாய்ப்புவசதிகளோ, ஏனைய அடிப்படை வசதிகளோ பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
அதேநேரம் இன்னும் சுமார் 50000க்கு உட்பட்;ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் பல்வேறு காரணங்களால் நண்பர்களுடைய வீடுகளிலும் அகதி முகாம்களிலும் வாழ்கின்றனர். பல ஆயிரம் மக்கள் நாட்டுக்கு வெளியே குறிப்பாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களை மீண்டும் குடியேற்றி அவர்களுடைய பொருளாதாரவசதி, தொழில்வாய்ப்புக்கள், வீட்டுப்பிரச்சினைகள் உட்பட அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து முழுமையான மீள்குடியேற்றத்தைச் செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்காக எல்லோரும் மிக கடுமையாக உழகை;க
வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே ஜனதிபதியவர்களும் பிரதமர் அவர்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பாரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் எதிர்பாக்கிறோம் எல்லோரதும் குறிப்பாக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்போடும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
எதிர்வருகின்ற ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செய்து வடகிழக்கிலே இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எல்லோரும் தங்களது சொந்த பிரதேசங்களில் மீளக் குடியமர்ந்து அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க என்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என இங்கு குறிப்பிட்டார்.



