முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய சுதந்திர முன்னணியில் மகிந்த உட்பட ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கட்டதனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், இந்நிலையில் அவர் திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றமையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிடுவார் என்றும். இன்றைய தினம் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில் சந்திரிக்காவின் வெளிநாட்டு பயணமானது சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனிப்பட்ட தனது குடும்பப்பயணமாகவே இங்கிலாந்து புறப்பட்டு சென்றதாக அவரின் ஊடகப்பிரிவு இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது. தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை பார்வையிடவே அவர் அங்கு சென்றதாகவும், பல தடவை இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்து சென்று வந்துள்ளார் என்றும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கிலாந்து சென்றுள்ள அவர், நாடு திரும்பிய பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் பற்றி விரிவாக ஆராய்வார் என்றும், தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
