ரவூப் ஹக்கீமுடன் இறுதி கலந்துரையாடல் - சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி அறிவிப்பு

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இறுதியாக ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற முன்னெடுப்பு மந்த கதியில் இடம்பெறுவது தொடர்பில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், சாய்ந்தமருது நலன்புரி அமையம் என்பவற்றின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் எட்டப்பட்டு முத்தரப்பினரும் இணைந்து மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வர்த்தமானிப் பிரகடனம் செய்யும் வகையில் நடவடிக்கையை துரிதப்படுத்துவது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டு, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை அடுத்த ஒரு சில தினங்களுக்குள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு வரவழைத்து பேசுவது எனவும் அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உட்பட சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்களையும் பங்கேற்க அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றித் தருகின்றோம் என்று தரப்படும் வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்வதில்லை எனவும் ஏற்கனவே அமைச்சர்களான கரு ஜெயசூரிய, ரவூப் ஹக்கீம் ஆகியோர் உத்தரவாதம் அளித்தபடி தேர்தலுக்கு முன்னர் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இணங்குவதில்லை எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் பிறகு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஊடக மாநாடு ஒன்றை நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சாதகமாகா விட்டால் இத்தேர்தல் தொடர்பில் பெரிய பள்ளிவாசல் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து மாற்றுத் தீர்மானங்களை மேற்கொள்வது எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -